சென்னை: “ஒற்றைத் தலைமை குறித்தும் இன்று விவாதிக்கப்பட்டது. அந்த விவாதம் ஓர் ஆரோக்கியமான முறையில் இருந்தது. இதுதொடர்பாக பெரும்பான்மையான தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என்பதை வலியுறுத்திக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
வரும் ஜூன் 23-ம் தேதியன்று நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது: “பொதுக்குழுவுக்கு முன்பாக தற்போது நடைபெற்ற கூட்டத்தில், ஒற்றைத் தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அந்த விவாதம் ஒரு ஆரோக்கியமான முறையில் இருந்தது. அதுதொடர்பாக பெரும்பான்மையான தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என்பதை வலியுறுத்திக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையானவர்களின் கருத்து என்பது, கட்சியைப் பொருத்தவரை, அதிமுகவைப் பொருத்தவரை, அதிமுக ஒரு வலிமையான இயக்கம் என்ற முறையில், ஒற்றைத் தலைமை அவசியம் என்பதை வலியுறுத்தி பேசினார்கள். அந்த ஒற்றைத் தலைமை யார் என்பது குறித்து தற்போது விவாதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக கட்சி முடிவு செய்யும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், இரட்டைத் தலைமை என்ற நிலையில் இருந்து பொதுக்குழுவுக்கு முன்பாக, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் தலைமை தொடர்பாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், பெரும்பான்மையானவர்கள் கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
காலம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் உள்ளது. அன்றைக்கு இருந்த நிலை வேறு, இன்றைக்கு இருக்கின்ற நிலை வேறு. இன்று ஒட்டுமொத்தமாக, அதிமுக தொண்டர்களும் சரி, கட்சியின் நிர்வாகிகளும் சரி, பொதுவாகவே எதிர்பார்ப்பது கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என்பதுதான். காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் இன்று அதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையானவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்” என்று அவர் கூறினார்.