ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. பயணிகளிடம் உரிய டிக்கெட் இருந்தும் விமானத்தில் ஏற அனுமதிக்காததாலும், அதன்பிறகு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததற்காகவும் ஏர் இந்தியாவுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், ”செல்லுபடியாகும் டிக்கெட் இருந்தும் பயணிக்க மறுத்த விவகாரம் தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) மூலம் தொடர்ச்சியான சோதனைகள், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. பிறகு, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் டிஜிசிஏ சோதனை செய்தபோது, ஏர் இந்தியா சார்ந்த சில விவகாரங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாதது கண்டறியப்பட்டது. இதனால் விமான நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விஷயம் மிகவும் கவலைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏர் இந்தியாவின் விளக்கங்களை கேட்டபின் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
மேலும், இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஏர் இந்தியாவுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் விமானத்தில் ஏற இடையூறு ஏற்பட்டால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் மாற்று ஏற்பாடு செய்ய முடிந்தால் விமான நிறுவனங்கள் ரூ.10,000 தொகையை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், 24 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானால் அதற்கான இழப்பீடு ரூ. 20,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாம்: இந்தியாவிலும் இருந்தது டைனோசர் – புதிய ஆதாரம் வெளியானது: எங்கே தெரியுமா?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM