புதுடில்லி : ‘ஆன்லைன்’ சூதாட்டம் தொடர்பான விளம்பரங்கள் வெளியிடுவதை தவிர்க்கும்படி பத்திரிகைகள், ‘டிவி’ மற்றும் இணையதளங்களுக்கு, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு பலர் அடிமையாகி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நாடு முழுதும் அதிகரித்து வருகின்றன.
இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.இந்நிலையில், அனைத்து பத்திரிகை, டிவி மற்றும் இணையதளங்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. அதன் விபரம்:நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் சூதாட்டம் சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது, சமூக பொருளாதார நிலையில் பல ஆபத்துகளை விளைவிக்கின்றன.
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, அச்சு ஊடகங்கள், டிவி, இணையதளங்கள், சமூக வலைதளங்கள் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement