மதுரை அருகே வரதட்சணை கொடுமையால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கணவர் மற்றும் மாமியாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஊமச்சிகுளத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கும் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த பிரீத்தா என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று ஒரு குழந்தையுடன் அதே பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கணவர் ராஜசேகர், நகை மற்றும் பணம் வரதட்சணையாக கேட்டு மனைவி பிரித்தாவை அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரீத்தா கடந்த 2011 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சமயநல்லூர் காவல்துறையினர் கணவர் ராஜசேகர் மற்றும் அவரின் தாயார் சகுந்தலா ஆகிய இருவர் மீதும் வரதட்சணை கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மதுரம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய ராஜசேகர் மற்றும் அவரது தாயார் சகுந்தலா ஆகிய இருவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும், ராஜசேகருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும், தாயார் சகுந்தலாவுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM