கொழும்பு: இலங்கையில் வாரந்தோறும் முன்பதிவு செய்பவருக்கு மட்டும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் புதிய நடைமுறை அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்நாட்டின் மின்சக்தி, எரிசக்தித்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதுமட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கு வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 15 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
டீசல், பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் அது கிடைக்கவும் இல்லை. வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து பெட்ரோல், டீசல் வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒவ்வொரு முறையும் இலங்கை ஏற்கெனவே பெட்ரோல் டெலிவரி செய்ததற்கான பணத்தை ஒப்படைக்க வேண்டும். ஆனால் கூறியபடி இலங்கை அரசால் கடன் தொகையை திருப்பிச் செலுத்த இயலவில்லை. இதனால் இலங்கையில் மீண்டும் பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் எல்லாம் பெட்ரோல் பங்க் முன்பு வரிசை கட்டி காத்திருக்கின்றனர்.பெட்ரோல் இல்லாததால் ரோட்டில் வாகனங்களே இல்லாமல் நெருக்கடி இல்லாமல் காட்சியளிக்கிறது.
இந்தநிலையில் முன்பதிவு செய்பவருக்கு மட்டும் வாரந்தோறும் பெட்ரோல், டீசல், எரிவாயு விற்பனை செய்யும் புதிய நடைமுறை அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை எரிசக்தித்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ரேஷன் முறையில் பெட்ரோல்- டீசல்
கஞ்சன விஜேசேகர, பெட்ரோல், டீசல் விநியோகம் தொடர்பாக சில கருத்துகளை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
இலங்கை அரசு தற்போது ஒருவாரத்துக்கான எரிபொருட்களை மட்டுமே இறக்குமதி செய்து வருகிறது. 4 மணிநேரத்துக்கு மின்சாரம் வழங்க பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளுக்கு ஒரு மாதத்துக்கு 100 மில்லியன் டாலர் செலவிடப்படுகிறது. இப்போது ஒரு மாதத்துக்கான எரிபொருட்கள் செலவும் 750 மில்லியன் டாலராகிவிட்டது. இதனால் 24 மணிநேரம் மின்சாரம் கிடைக்கும் வரையில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு விற்பனைக்கு ரேஷன் முறை அவசியமாகிறது.
இலங்கையில் 24 மணிநேரமும் மின்சாரத்தை வழங்கவும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விநியோகத்தை சீராக சாத்தியமாக்கும் வரையிலும் ஜூலை மாதம் முதல் புதிய நடைமுறையை அமல்படுத்தும் யோசனை உள்ளது. எரிபொருள் தேவை உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொண்டால் வாரம் ஒரு முறை ரேஷன் முறையில் அவர்களுக்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு விநியோகிக்கப்படும். இந்த கோட்டா முறை ஜூலை முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விவசாயம் செய்ய விடுமுறை
இதனிடையே பெட்ரோல்- டீசல் தட்டுப்பாட்டை அடுத்து இலங்கையில் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் எனவும், வெள்ளி முதல் ஞாயிறு வரை 3 நாட்கள் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில காலத்துக்கு இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தெரிகிறது. எரிபொருள் பற்றாக்குறையை அடுத்து இந்த நடவடிக்கையை இலங்கை அரசு எடுத்துள்ளது.
இதுகுறித்து இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘‘அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒரு வேலை நாளில் கூடுதலாக விடுமுறை வழங்குவது அவர்களது வீட்டு முற்றத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக தான். அந்த விடுமுறை தினத்தில் தேவையான காய்கறி உள்ளிட்டவற்றை வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டுக் கொள்ளுமாறு அரசு ஊழியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். அதுமட்டுமின்றி அரசு ஊழியர்கள் அன்றைய தினம் பயணங்களைக் குறைப்பதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க உதவும்’’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.