செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் தெரியும் 'மனிதனின் கண்' – புகைப்படம் வெளியிட்ட விஞ்ஞானிகள்

பாரிஸ்,

நமது சூரிய குடும்பத்தில் பூமியை தவிர வேறு எந்த கிரகங்களிலும் மனிதர்களால் ஒரு சில வினாடிகள் கூட உயிர்வாழ முடியாது. ஆனால், செவ்வாய் கிரகம் மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளது. அங்குள்ள வெப்பம், பருவநிலை மாற்றம், ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல அம்சங்கள் நமது பூமிக்கு சற்றே நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்ச்சிக்கு உலகின் பல்வேறு நாடுகள் கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து வருகின்றன. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்திலும், நமது பூமியைப் போலவே உயிர் ஆதாரங்கள் இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறும் நிலை வரலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

அவ்வபோது செவ்வாய் கிரகம் தொடர்பாக வெளியிடப்படும் சில புகைப்படங்களும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே நாசா வெளியிட்ட புகைப்படங்களில் செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் மனிதனின் முகம், பிரமிடு போன்ற அமைப்பு ஆகியவை தெரிந்ததாக கூறப்பட்டது. அவை இயற்கையாக அமைந்த அமைப்புகள் தான் என விஞ்ஞானிகள் விளக்கமளித்தனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய ஆய்வு நிறுவனம் அண்மையில் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அந்த புகைப்படத்தில், செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் மனிதனின் கண் போன்ற அமைப்பு காணப்பட்டது.

நிலப்பரப்பில் கண் போன்ற அமைப்பு காணப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே நமது பூமியில் உள்ள மிகப்பெரிய பாலைவனமாக அறியப்படும் ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தில், இதே போல் கடந்த 1965 ஆம் ஆண்டு கண் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த மர்மமே இன்னும் விலகாத நிலையில், செவ்வாய் கிரகத்தில் தெரியும் இந்த கண் அமைப்பு, தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது.

அதே சமயம், இந்த கண் போன்ற அமைப்பு மண் படிமங்கள் அல்லது எரிமலைக் குழம்பு சென்ற தடமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் மனிதக் கண்களைப் போலவே, இதிலும் நரம்புகள் போன்ற அமைப்பு தெரிவதால், அவை செவ்வாய் கிரகத்தில் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நீர் இருந்ததற்கான ஆதாரமாக இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Our @esascience Mars Express mission captured this 30 km-wide crater nestled between winding channels on #Mars – resembling veins running through a human eyeball The channels likely carried liquid water around 3.5–4 billion years ago!

https://t.co/sKbNxVAQxx #ExploreFarther pic.twitter.com/SBfBeOB8OO

— ESA (@esa) June 10, 2022 “>Also Read:


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.