போபால் : ஒன்றுவிட்ட தங்கை உயிரிழந்த வருத்தத்தில் இருந்த வாலிபர், தங்கையின் சிதையில் குதித்து தற்கொலை செய்தார்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சாகர் மாவட்டம் மஜ்கவான் கிராமத்தில், 18 வயது இளம்பெண் ஜோதி தாகா, சமீபத்தில் காணாமல் போனார். அவரது உடல், ஊரில் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. கிணற்றில் தவறி விழுந்து அவர் உயிரிழந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.
இதையடுத்து, ஜோதிக்கு இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, அங்கு வந்த அவரது ஒன்று விட்ட சகோதரர் கரண், 21, மிகுந்த சோகத்தில் இருந்தார். சிதைக்கு முன், தரையில் புரண்டு கதறி அழுதார்.ஜோதியின் சிதைக்கு தீ வைத்த பிறகு, உறவினர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். ஆனால், கரண் மட்டும் அங்கேயே இருந்துள்ளார்.
அனைவரும் சென்ற பிறகு, தங்கையின் சிதையில் அவர் குதித்துள்ளார். நீண்ட நேரமாகியும் கரண் திரும்பாததால், அவரைத் தேடி உறவினர்கள் இடுகாட்டுக்கு சென்றபோது, சிதையில் கரண் இருப்பதைக் கண்டனர். அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
தங்கையின் சிதைக்கு அருகிலேயே, கரணுக்கும் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. தங்கை மீதான பாசத்தில், அந்த வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement