சேலம்: “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்” என்று சமக தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான சரத்குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:
“தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை என்பது பெரிய அளவில் ஏதுமில்லை. பாஜக மதத்தை வைத்து அரசியல் நடத்துவதாக கூறப்பட்டாலும், பிற மதத்தவரை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பாஜகவினர் மீது கட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் அனைவரும் சமம் என்ற சமத்துவம் சூழ்நிலையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும்.
பாஜக தலைவர் அண்ணாமலை பிரதான எதிர்க்கட்சியாகத்தான் செயல்பட்டு வருகிறார். அவரது கருத்துக்கு பதில் சொல்ல வேண்டியது ஆளுங்கட்சியினரின் கடமை. எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கருத்துகளை முன்வைக்காத நிலையில் பாஜக முன்வைப்பது தவறில்லை.
சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்தவரையில் தொய்வடையவில்லை. தேர்தலில் போட்டியிடுவதால் தங்கள் கையில் இருக்கும் பணத்தையும் இழக்க நேரிடும் என்பதால் கட்சி நிர்வாகிகள் தயங்குகின்றனர். இருப்பினும் எங்கள் கட்சியினர் மக்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
ஜனநாயக அரசியல் தற்போதைய சூழ்நிலை இல்லாமல் உள்ளது. கோடி கோடியாக தேர்தலில் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், சராசரி குடிமகன் அரசியலுக்கு வர முடியாத நிலை உருவாகியுள்ளது” என்று அவர் கூறினார்.