இப்போது சின்னத்திரை உலகில் ஸ்ரீநிதி விவகாரம்தான் ஹாட் டாபிக்! `வலிமை’ படம் குறித்த விமர்சனம், சிம்பு குறித்து சர்ச்சையான கருத்துகள் என இவர் வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக, தொடர்ந்து சீரியல் நடிகையும் தனது தோழியுமான நட்சத்திராவின் திருமணம் குறித்தும் சில விஷயங்களைப் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், “நக்ஷூ பாதுகாப்பாக இல்லை. அவள் காதலிக்கிறவரின் குடும்பமே அவளை லாக் செய்து வைத்திருக்கிறது. நக்ஷூவை மீட்க உதவுங்கள்” என்கிற ரீதியில் பல விஷயங்களைப் பேசியிருந்தார்.
ஸ்ரீநிதியின் இந்த வீடியோவுக்குப் பதில் அளித்திருந்த நட்சத்திரா,
“கடந்த சில நாள்களாக நான் ஏதோ பிரச்னையில் இருக்கேன்னு வதந்தி பரவிகிட்டு இருக்கு. என்னை யாரோ கட்டாயப்படுத்தி பிடிச்சு வச்சிருக்காங்க. எங்கேயும் விடாம வச்சிருக்காங்க என்றெல்லாம் சொல்லிட்டிருக்காங்க. நான் நல்லாதான் இருக்கேன். தினமும் ஷூட்டிங் போயிட்டு வந்திட்டிருக்கேன். எனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல” எனத் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் நட்சத்திரா திருமணம் செய்து கொள்ளப் போவதாக சின்னத்திரை ஏரியாவில் கை காட்டப்படும் விஷ்வாவிடமே நாம் பேசினோம்.
“நட்சத்திராவைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா?” என்ற நம் கேள்விக்கு ஆரம்பத்தில் பதிலளிக்கத் தயங்கிய அவர். பிறகு பேசத் தொடங்கினார்…
“சில பேச்சுவார்த்தைகள் போயிட்டிருக்கு. ரெண்டு தரப்பு வீட்டுலயும் பெரியவங்க பேசிட்டிருக்காங்க. அதுல நல்லவொரு முடிவு எடுக்கப்பட்டதும் நாங்களே முறைப்படி மீடியாவுக்கு அறிவிக்கலாம்னு இருக்கோம். அவசியம் சொல்லித்தான் செய்வோம்” என்றவரிடம்,
ஸ்ரீநிதியின் வீடியோ குறித்துக் கேட்டதற்கு,
“சமீபமா அந்தப் பொண்ணு மன அழுத்தத்துல இருக்காங்க. மென்டலி பாதிக்கப்பட்டு ஏதேதோ பேசிட்டிருக்காங்க. என் குடும்பத்தைப் பத்தி அவங்க சொன்னது எதுவுமே உண்மை கிடையாது” என்கிறார்.