Farmers accuse central and state governments of acting in favour of insurance companies: காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு சம்பா, தாளடி மற்றும் கோடை பயிர்கள் விளைவித்து காப்பீடு செய்திருந்த விவசாயிகளுக்கு ஏப்ரல் மாதம் வழங்கப்பட வேண்டிய பயிர் இழப்பீட்டு தொகை சுமார் ரூ.1,200 கோடி இன்னும் வழங்கப்படாததைக் கண்டித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், கைகளில் வாழைக் கன்றுகளை ஏந்தியவாறு, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலதாமதத்திற்குரிய வட்டியை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும், விவசாயிகளின் நலனைக் கருதி காப்பீட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் மாவட்டந்தோறும் பகுதி அலுவலகங்கள் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: போக்குவரத்து நெரிசலை குறைக்க உய்யகொண்டான் கரைகளை அகலப்படுத்த முடிவு – அமைச்சர் கே.என்.நேரு
திருவையாறு அடுத்துள்ள மேலதிருப்பூந்துருத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பாக கணபதி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ராஜமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணைச் செயலாளர் திருப்பூந்துருத்தி சுகுமாரன், கடந்த 2021-ம் ஆண்டு சம்பா, தாளடி மற்றும் கோடை நெல் விளைவித்த விவசாயிகள் அதற்குரிய பிரிமியம் செலுத்தி பயிர்க் காப்பீடு செய்திருந்தனர். அந்தப் பயிர்கள் அனைத்தும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறுவடை செய்யப்பட்டுவிட்டது. அறுவடை செய்யப்பட்டதிலிருந்து 60 நாட்களுக்குள் பயிர்க் காப்பீட்டிற்கான இழப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்பது விதி. அதன்படி ஏப்ரல் 30-ம் தேதி முடிவடைந்ததும் பயிர்க் காப்பீட்டிற்கான இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் சுமார் ரூ.1,200 கோடி இழப்பீட்டு தொகை தர வேண்டியுள்ளது. ஆனால் தற்போது மே மாதம் கடந்து ஜுன் மாதம் ஆகியும் இன்னும் காப்பீட்டு நிறுவனங்கள் உரிய இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை.
காப்பீட்டு நிறுவனங்களின் மண்டல அலுவலகங்கள் அந்தந்த மாநில தலைநகரங்களில் மட்டுமே உள்ளன. அதன்படி தமிழகத்தில் காப்பீட்டு நிறுவனங்களின் மண்டல அலுவலகங்கள் சென்னையில் உள்ளன. அதனால் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் வசிக்கும் விவசாயிகள் காப்பீட்டு இழப்பீடு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக உரிய விளக்கம் பெற நேரடியாக காப்பீட்டு நிறுவனங்களின் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது அந்தந்த மாவட்ட ஆட்சியர் அல்லது வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகங்கள் வழியாகவே காப்பீட்டு நிறுவனங்களை தொடர்பு கொள்ள வேண்டிய நிலை இருந்து வருகிறது. இவ்விஷயத்தில் மத்திய ஒன்றிய அரசும், மாநில அரசும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. எனவே விவசாயிகளின் நலன் கருதி காப்பீட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் மாவட்ட தலைநகர்களில் பகுதி அலுவகத்தை திறக்க வேண்டும். அதேபோல, காப்பீட்டு நிறுவனங்கள் இந்தியா முழுவதும் வாழைப் பயிருக்கு பிரிமியமாக 5 % வசூலித்து வருகின்றன. அதை நெற் பயிருக்கு வசூலிப்பதுபோல 1.5 % – 2 % வரை குறைத்து வசூலிக்க வேண்டும். இதன் மூலம் நிறைய விவசாயிகள் பயன் பெறுவர் என்றார் திருப்பூந்துருத்தி சுகுமாரன்.
எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்