பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர் சித்தாந்த் கபூர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் ஜாமினில் விடுவித்த நிலையில், அவர்கள் விசாரணை நாளில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு எம்.ஜி.சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் பார்ட்டி நடப்பதாகவும், அதில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகவும் போலீசாருக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் பெங்களூரு போலீசார், சம்பந்தப்பட்ட ஓட்டலில் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் 35 பேர் பிடிபட்டனர். அவர்களுகஅகு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் உட்பட 5 பேர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சித்தாந்த் கபூரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சித்தாந்த் கபூர் உள்ளிட்ட 5 பேரையும் ஜாமினில் போலீசார் விடுவித்தனர். இதுகுறித்து பெங்களூரு டிசிபி பீமா சங்கர் குல்லேட் கூறுகையில்: ‘குற்றம்சாட்டப்பட்ட சித்தாந்த் கபூர் மற்றும் நான்கு பேரும் விசாரணைக்காக போலீசார் அழைக்கும் நாளில் நேரில் ஆஜராக வேண்டும். அவர்களை கைது செய்வது தொடர்பா நடைமுறைகள் பின்பற்றப்படும். தற்போது 5 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனையில் சித்தாந்த் கபூர் உள்ளிட்ட 5 பேரும் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியானதால், அவர்களுக்கு அந்த போதைப் பொருள் எங்கிருந்து கிடைத்தது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.