நாமக்கல்: குமாரபாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 10 சிறு சாயப்பட்டறைகளை நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உத்திரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டன. அப்போது சாயப்பட்டறை உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குமாரபாளையத்தில் விசைத்தறி தொழில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதை மையப்படுத்தி அங்கு ஏராளமான சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் சில சாயப்பட்டறைகள் உரிய அனுமதியின்றி இயங்கி வருகின்றன. அவை சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் காவிரி ஆற்றில் நேரடியாக கலந்து விடுவது வாடிக்கையாக உள்ளது. அவ்வப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் திடீர் ஆய்வு மேற்கொண்டாலும் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமல் உள்ளது.
இந்நிலையில், இன்று மாவட்ட மாசுக்கட்டுபாட்டு வாரிய அலுவலர் மோகன், வட்டாட்சியர் தமிழரசி தலைமையிலான அதிகாரிகள் குமாரபாளையத்திற்கு உட்பட்ட நடராஜா நகர், கம்பன் நகர், ஓலப்பாளையம், ஆனங்கூர் சாலை, அரசு மேல்நிலைப்பள்ளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 10 சாயப்பட்டறைகள் அனுமதி பெறாமல் இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து, அவை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் பொக்லைன் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டன. அப்போது சாயப்பட்டறை உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறு சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன், “அனுமதி பெற்ற சாயப்பட்டறையினர் பலர் சாயக் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக காவிரி ஆற்றில் பல கோடி லிட்டர் நீரை கலக்க விட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிலம் வாங்கும் பணியை கூட முடித்துள்ளோம். இன்னும் அதற்கான எந்தத் தீர்வும் ஏற்படாமல் உள்ளது. இதனால் சிறு சாயப்பட்டறையினர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது” என்றார்.
இதனை கேட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சாயப்பட்டறை உரிமையாளர்களை சமரசம் செய்தனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.