‘விக்ரம்’ பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 3-ம் தேதி வெளியானப் படம் ‘விக்ரம்’. நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். திரையிடப்பட்ட 10 நாட்களிலேயே 300 கோடி ரூபாய் வசூலித்து கோலிவுட்டில் இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் படமாக அமைந்துள்ளது.
தற்போதும் பல திரையரங்குகளில் பார்வையாளர்கள் கூட்டம் நிறைந்தே காணப்படுகிறது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். உதயநிதி ஸ்டாலினின் ரெண் ஜெயண்ட் மூவீஸ் இந்தப் படத்தை வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், சென்னை முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, நடிகர் கமல்ஹாசன் ‘ விக்ரம்’ திரைப்படம் வெற்றி பெற்றதையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் ‘விக்ரம்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் உடனிருந்தார்.