போபால்: மத்திய பிரதேசத்தில் உணவு டெலிவரி பெண் முறைத்து பார்த்ததால், அந்த பெண்ணை நான்கு பெண்கள் வெளுத்து வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் துவாரகாபுரி நகரின் ரிஷி பேலஸ் காலனியில் வசிக்கும் நந்தினி யாதவ், பிரபல உணவு சப்ளை நிறுவனமான டோமினோவில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அப்ேபாது அதேபகுதியை சேர்ந்த 4 இளம்பெண்களை நந்தினி யாதவ் முறைத்து பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த 4 இளம்பெண்களும் நந்தினி யாதவை பிடித்து சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கும்பல் தாக்குதல் என்பது வடமாநிலங்களில் ஆண்கள்தான் செய்து வந்தார்கள் என்றால், பெண்களும் இதேபோன்ற செயல்களில் இறங்கியுள்ளனர் என்று பலரும் கருத்துகளையும், கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நந்தினி யாதவ் கொடுத்த புகாரின் அடிப்படையில், அதே காலனியில் வசிக்கும் பிங்கி மற்றும் அவரது மூவர் தோழிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நந்தினி யாதவ் கூறுகையில், ‘சனிக்கிழமை வழக்கம் போல் நான் வேலைக்குப் போயிருந்தேன். அப்போது பிங்கியும் அவரது மூன்று தோழிகளும் என்னை வழிமறித்து தாக்கினர். குச்சியால் அடித்தனர். சாலையில் விழுந்த என்னை யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. பிறகு அப்பகுதியில் இருந்த வேறொருவரின் வீட்டிற்குச் சென்று என் உயிரைக் காப்பாற்றிக் கொண்ேடன்’ என்றார்.