எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தஞ்சையில் நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பாஜகவில் இணைகின்றனர்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் ரஜினி.கணேசன் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 14 ஒன்றியங்கள், இரண்டு மாநகரங்கள், ஒரு நகரம் ஆகியவற்றைச் சேர்ந்த ரசிகர்கள்; 1000-1500 பேர் பாஜகவில் இணைகிறார்கள்.
அதேபோல பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சண்முகதேவன் தலைமையிலும், கரூர் மாவட்ட துணைச் செயலாளர் ரகு தலைமையிலும், விருதுநகர் மாவட்ட ஒன்றிய செயலாளர் எஸ்.கே. சக்திவேல் தலைமையிலும், திருவாரூர் மாவட்ட செயலாளர் முருகானந்தம் தலைமையிலும் பலர் பாஜகவில் சேர இருக்கின்றனர். இது ஒரு தொடக்கமே. இது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
ஆன்மிக அரசியல் என்பது நேர்மையான, வெளிப்படையான, உண்மையான, லஞ்ச-ஊழல் இல்லாத அரசியல். அதை பாஜக கையில் எடுத்துள்ளது. எனவே அக்கட்சியில் இணைய முடிவு செய்துள்ளோம்.
பாஜக மாநில தலைவர் இளம் புயலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது செயல்பாடு எங்களுக்கு முழு திருப்திகரமாக இருக்கிறது. ஆகவே அண்ணாமலையோடு கை கோர்ப்போம் என்று ரஜினி கணேசன் கூறினார்.
மேலும், ரசிகர் மன்றம் என்பது வேறு. அரசியல் அமைப்பு என்பது வேறு. ரசிகர் மன்றம் என்பது பிறந்த வீடு. அரசியல் அமைப்பு என்பது புகுந்த வீடு. பாஜகவில் இணைந்தாலும் எங்களது ரசிகர் மன்ற பயணம் தொடரும் என்றும் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“