இஸ்லாமியர்களின் இறை தூதரான முகம்மது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வாரம் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. அரபு நாடுகள் பலவும் இவ்விவகாரத்தில் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்ததோடு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லியிருந்தன.
இந்தப் பின்புலத்தில், சாண் டியாகோ மாகாண பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியர் அகமது டி.குரு ‘தி கான்வர்சேஷன்’ தளத்தில் எழுதிய கட்டுரை ஒன்று முக்கியத்துவம் பெறுகிறது. அந்தக் கட்டுரையின் முக்கிய அம்சங்கள் இங்கு…
‘2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றது முதலே இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளும், நடவடிக்கைகளும் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. இஸ்லாமியர்களுக்கு எதிராக குடியுரிமைச் சட்டத்தை பாஜக அரசு 2019-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த பாரபட்ச கொள்கைகள் உலக அளவில் கவனம் பெறுகின்றன. ஏனெனில் உலக அளவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஓர் இஸ்லாமியராக, முகமது நபியின் மீதுள்ள ஆழ்ந்த மரியாதையை நான் நன்கு அறிவேன், மேலும் தனிநபர்களின் வெறுப்பையும் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். எனினும் இவ்விவகாரத்தில் இஸ்லாமிய அரசாங்கங்களின் எதிர்வினை என்பது அவர்களின் அரசியல் ஆட்சிகளைப் பிரதிபலிக்கிறது.
எனது புத்தகமான “Islam, Authoritarianism and Underdevelopment”-ல் நான் கூறியிருப்பது போல பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் சர்வாதிகாரமாக செயல்படுகின்றன. வெளிநாடுகளில் உள்ள இஸ்லாமிய சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதைவிட, இஸ்லாத்திற்கு எதிரான அவதூறுகளைக் கண்டிப்பதில்தான் அவை கவனம் செலுத்துகின்றன.
அவதூறுகளுக்கு முக்கியத்துவம்… மனித உரிமைகளை புறக்கணித்தல்… – முகமமது நபிகளுக்கு எதிரான கருத்துக்கு இஸ்லாமிய நாடுகள் எதிர்வினையாற்றுவது இது முதல் முறை அல்ல. உதாரணத்துக்கு 1989-ஆம் ஆண்டு ஈரான் மூத்த மத தலைவர் கொமேனி, நாவல் ஆசிரியரான சல்மான் ரூஷ்டியை கொல்வதற்கு இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மற்றொரு பக்கம் இஸ்லாமிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் மீது மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. உதாரணத்துக்கு, பாகிஸ்தானில் அகமதியா, ஷியா, இந்துக்கள் மீது வன்முறை நடத்தப்படுகிறது. ஈரானில் பலுசிஸ், குர்து ஆகிய சிறுபான்மையினர்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது.
வெளிநாடுகளில் உரிமை சார்ந்து பேசும் அதேநேரத்தில் உள்நாட்டில் இஸ்லாமிய நாடுகளின் நடவடிக்கைகள் முரணாக உள்ளது. இஸ்லாமிய நாடுகளின் இந்த எதிர்வினைகள் பிற நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இஸ்லாமியர்களுக்கு நிச்சயம் உதவாது. உண்மையில் அவர்களுக்கு நிலையான மற்றும் கொள்கை ரீதியான ஆதரவே தேவைப்படுகிறது.
> இது, முகம்மது ரியாஸ் எழுதிய ‘இந்து தமிழ் திசை’ ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்