பெரு நிறுவனங்கள் பலவும் முட்டி மோதிக் கொண்டிருந்த ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த ஐந்து சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமம் 48,390 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது. மலைப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்திருக்கும் இந்த வியாபாரத்தின் மூலம், உலகளவில் அதிக மதிப்புமிக்க விளையாட்டுத் தொடர்களின் பட்டியலில் அமெரிக்காவின் National Football League-க்கு அடுத்த இரண்டாம் இடத்தை ஐ.பி.எல் எட்டியிருக்கிறது.
2008-ம் ஆண்டில் ஐ.பி.எல் முதன்முதலாக தொடங்கப்பட்ட போது முதல் 10 சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமத்தை சோனி நிறுவனமே வாங்கியிருந்தது. 10 சீசன்களுக்காக அந்த நிறுவனம் கொடுத்த தொகை ரூ.8,200 கோடி மட்டுமே. 2008 முதல் 2017 வரையிலான இந்த 10 ஆண்டுகளில் ஐ.பி.எல் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றது. கோடை விடுமுறையில் ஏப்ரல் – மே இரண்டு மாதங்களில் ஐ.பி.எல்தான் மிகப்பெரிய பேசுபொருளாக இருக்கும். சோனியின் ஒளிபரப்பு உரிமம் 2017-ல் முடிவடைந்த நிலையில், பிசிசிஐ அடுத்த 5 சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமத்தை விற்பதற்கான ஏலத்தை நடத்தியது. 2017 – 2022 வரையிலான இந்த 5 சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமையை ரூ.16,346 கோடி கொடுத்து ஸ்டார் குழுமம் வாங்கியிருந்தது. தொலைக்காட்சி உரிமம் மட்டுமல்லாமல் டிஜிட்டல் உரிமமும் இதனுள் அடக்கமாகியிருந்தது. அதனுடைய மதிப்பு ஏறக்குறைய ரூ.3,900 கோடி.
ஸ்டார் குழுமத்தின் வசம் இருந்த ஒளிபரப்பு உரிமம் சில நாள்களுக்கு முன் நடந்து முடிந்த 15வது சீசனோடு காலாவதியான நிலையில், அடுத்த 5 சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமத்தை விற்பதற்கான வேலைகளில் பிசிசிஐ இறங்கியது. இந்த 15 ஆண்டுகளில் ஐ.பி.எல் மீதான ரசிகர்களின் ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்ததால் இதனைச் சுற்றிய வர்த்தகமும் எப்போதுமே ஏறுமுகத்தில்தான் இருந்தது. இதனால் வரவருக்கும் 5 சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமம் எதிர்பார்த்திடாத மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகும் எனக் கணிக்கப்பட்டது.
அதற்கேற்ற வகையில் இந்த முறை ஏலத்திற்கான நடைமுறையிலும் சில மாற்றங்களை பிசிசிஐ செய்திருந்தது. இதன்படி, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்புகளுக்கான உரிமங்கள் தனித்தனியாக ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், வழக்கம்போல இந்தியாவிற்கு வெளியே மற்ற நாடுகளில் ஒளிபரப்புவதற்கான உரிமம் தனி. இதுபோக, குறிப்பிட்ட சில போட்டிகளை மட்டும் டிஜிட்டலில் ஒளிபரப்புவதற்கான உரிமம் எனத் தனித்தனியாக நான்கு உரிமங்களுக்கு ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பல பெரு நிறுவனங்களும் இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கான நடைமுறைகளில் இறங்கின.
குறிப்பாக, அமேசான், ரிலையன்ஸின் பெருவாரி பங்குகள் உள்ள Viacom 18 ஆகிய நிறுவனங்கள் ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமத்தை வாங்குவதற்காக தீவிரம் காட்டி வருவதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவர்கள் போக கடைசி 5 சீசன்களை ஒளிபரப்பியிருக்கும் ஸ்டார் குழுமம், முதல் 10 சீசன்களை ஒளிபரப்பியிருந்த சோனி நிறுவனம் மற்றும் ஜீ நிறுவனம் ஆகியவையும் கோதாவில் இறங்கியிருந்தன.
நான்கு விதமான உரிமங்களுக்கும் சேர்த்து அடிப்படை விலையாக ரூ.32,890 கோடியை நிர்ணயித்திருந்தது பிசிசிஐ. ரூ.45,000 கோடி அளவுக்கு இந்த உரிமங்கள் விலைபோகும் என பிசிசிஐ எதிர்பார்த்தது. பெரு நிறுவனங்கள் பலவும் முட்டி மோதுவதால் ரூ.60,000 கோடி வரைக்குமே கூட விலைபோகலாம் எனப் பலராலும் கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான், ஏலம் தொடங்குவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அமேசான் நிறுவனம் ஏல நிகழ்விலிருந்து பின் வாங்கியது. போட்டி கடுமையாக இருக்கும் சூழலில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டி வந்தால் அந்த முதலீட்டை மீட்டெடுத்து லாபம் பார்ப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால் அமேசான் வெளியேறியதாக தகவல்கள் கசிந்திருந்தன.
வலுவான போட்டியாளராகக் கருதப்பட்ட அமேசான் வெளியேறிய போதும், ஏலத்தின் மீதான ஈர்ப்பு குறையவில்லை. பிசிசிஐ எதிர்பார்த்ததை விட அதிகமாக மொத்தமாக ரூ.48,000 கோடி ரூபாய்க்கு அனைத்துவிதமான உரிமங்களும் ஏலம் போயிருக்கின்றன.
1) Package A என்றழைக்கப்படும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ரூ.23,575 கோடிக்கு ஸ்டார் குழுமமே வாங்கி தங்களின் உரிமத்தைத் தக்கவைத்திருக்கிறது.
2) Package B ஆன டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.20,500 கோடிக்கு Viacom 18 நிறுவனம் வாங்கியிருக்கிறது.
3) சீசனின் முதல் போட்டி, ப்ளே ஆஃப்ஸ் மற்றும் மாலை நேர போட்டிகள் என சீசனுக்கு 18 போட்டிகளை மட்டும் ஒளிபரப்புவதற்கான டிஜிட்டல் உரிமமான Package C யையும் Viacom 18 நிறுவனமே ரூ.3,258 கோடிக்கு வாங்கியிருக்கிறது.
4) Package D ஆன மற்ற நாடுகளில் ஒளிபரப்புவதற்கான உரிமத்தை 1,057 கோடிக்கு Viacom 18 மற்றும் டைம்ஸ் குழுமம் வாங்கியிருக்கின்றன.
ஒட்டுமொத்தமாக ரூ.48,390 கோடிக்கு வியாபாரம் நடந்து முடிந்திருக்கிறது.
இத்தனை பெரிய தொகைக்கு வியாபாரம் நடந்திருந்தாலும் ஏலமானது ஒரு போட்டியின் மதிப்பின் அடிப்படையிலேயே நடந்திருந்தது.
2017-22 இந்த சீசன்களில் ஐ.பி.எல் இன் ஒரு போட்டியின் மதிப்பு ஏறக்குறைய ரூ.55 கோடியாக இருந்தது. அதாவது, ஸ்டார் குழுமம் ஒரு போட்டிக்கு 55 கோடி ரூபாய் என்ற விகிதத்தில் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியிருந்தது.
இந்த ஏலத்தில் ஒரு போட்டிக்கு தொலைக்காட்சி உரிமத்திற்கு ரூ.49 கோடி, டிஜிட்டல் ஒளிபரப்பிற்கு ரூ.33 கோடி, பிரத்யேக போட்டிகளுக்கான உரிமத்திற்கு ரூ.16 கோடி, பிற நாடுகளுக்கான உரிமத்திற்கு ரூ.3 கோடி என அடிப்படை விலைகளை நிர்ணயித்திருந்தனர்.
ஸ்டார் குழுமம் ஒரு போட்டிக்கான தொலைக்காட்சி உரிமத்தை ரூ.57.5 கோடிக்கு வென்றிருக்கிறது. Viacom 18 டிஜிட்டலில் ஒரு போட்டியை ஒளிபரப்புவதற்கான உரிமத்தை ரூ.50 கோடிக்கு வென்றிருக்கிறது.
இந்த வகையில் மட்டுமே அடுத்த 5 சீசன்களுக்கு ஐ.பி.எல்-ன் ஒரு போட்டியின் மதிப்பு ரூ.107 கோடிக்கும் மேல் உயர்ந்திருக்கிறது. இது கடந்த முறையை விட அப்படியே இரண்டு மடங்கு அதிகமாகும்.
தொலைக்காட்சி உரிமத்தை வென்ற நிறுவனம், டிஜிட்டல் உரிமத்தை வென்ற நிறுவனத்திற்கு சவாலளித்து இன்னொரு ரவுண்ட் ஏலம் நடத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தியும் ஸ்டார் குழுமத்தால் டிஜிட்டல் உரிமத்தை வெல்ல முடியவில்லை. Viacom 18-யே வென்றது. ஆக, இந்த முறை ஸ்டார் சேனல்களில் போட்டிகள் ஒளிபரப்பாகும். ஆனால், ஹாட்ஸ்டாரில் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய முடியாது. Viacom 18-ன் OTT இல் மட்டுமே போட்டிகள் ஒளிபரப்பாகும். அது VOOT தளமாக இருக்கலாம் என்கிறார்கள்.
டிஜிட்டலுக்கான உரிமம்தான் அத்தனை பேரையுமே ஆச்சர்யப்படுத்தியது எனச் சொல்லலாம். 2008-17 இந்த 10 சீசன்களுக்கும் சேர்த்தே ஏறக்குறைய ரூ.600 கோடிக்கு மட்டுமே டிஜிட்டல் உரிமங்கள் வியாபாரம் ஆகியிருந்தன. 2017-22 கடந்த 5 சீசன்களுக்கு ரூ.3,900 கோடிக்கு டிஜிட்டல் உரிமங்கள் விலைபோயிருந்தன. இந்த முறை பல மடங்கு அதிகமாக ஒரு புதிய உச்சத்தைத் தொட்டு டிஜிட்டல் உரிமம் மட்டுமே Viacom 18 நிறுவனத்தால் ரூ.23,758 கோடிக்கு வாங்கப்பட்டிருக்கிறது.
(Package C யும் சேர்த்து) தொலைக்காட்சி உரிமத்தைவிட டிஜிட்டல் உரிமம் ரூ.187 கோடி ரூபாய் அதிகமாக வியாபாரம் ஆகியிருக்கிறது.
போட்டிகளின் எண்ணிக்கையையுமே பிசிசிஐ அதிகரிக்க இருக்கிறது. 2025, 2026 சீசன்களில் தலா 84 போட்டிகளும் 2027 சீசனில் 94 போட்டிகளையும் பிசிசிஐ நடத்த இருக்கிறது. நடந்து முடிந்திருக்கும் சீசனைப் போலவே அடுத்த இரண்டு சீசன்களும் 74 போட்டிகளையே கொண்டிருக்கும். 5 சீசன்களின் 410 போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமத்தையே பிசிசிஐ இவ்வளவு பெரிய தொகைக்கு வியாபாரம் செய்து முடித்திருக்கிறது.
இந்த வியாபாரத்தின் மூலம் உலகிலேயே இரண்டாவது மதிப்புமிக்க விளையாட்டுத் தொடராக ஐ.பி.எல் மாறியிருக்கிறது.
என பிசிசிஐயின் செயலாளரான ஜெய் ஷா உரிமங்களை வென்ற நிறுவனங்களுக்கு செய்தி சொல்லியிருக்கிறார். ஜெய் ஷாவின் இந்த ஸ்டேட்மெண்ட் அடிக்கோடிடப்பட வேண்டியது. அடுத்த சில ஆண்டுகளில் கிரிக்கெட் உலகில் நாம் தரிசிக்க இருக்கும் பல மாற்றங்களுக்கான ஆரம்பம் இங்கிருந்துதான் தொடங்கவிருக்கிறது.