மெய்நிகர் நாணயம் எனப்படுகிற கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிவைச் சந்தித்து வருகின்றன. முன்னணி கிரிப்டோகரன்சியாக உள்ள பிட்காயின் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டு 22,000 டாலருக்குக் குறைந்துள்ளது. கடந்த திங்கள் அன்று 18 மாதங்களில் இல்லாத அளவில் 17% அளவுக்குச் சரிந்து 22,000 டாலரை எட்டியது.
பிட்காயின் மட்டுமல்ல, எத்ரியம் உள்ளிட்ட பிற கிரிப்டோ கரன்சிகளும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. பிட்காயின் 60 சதவிகிதத்துக்கும் மேல் குறைந்திருக்கிறது. எத்ரியம் 75% விலை குறைந்திருக்கிறது. இன்னும் சில கிரிப்டோகரன்சிகள் 90% வரையிலும்கூட விழ்ச்சி கண்டுள்ளன.
டிஜிட்டல் யுகத்தின் புதிய முதலீடாகக் கருதப்படும் கிரிப்டோகரன்சிகள் கவர்ச்சிகரமானதாக இருப்பதால், கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள் உட்பட பலரும் தீவிரமாக முதலீடு செய்து வருகிறார்கள். தற்போது கிரிப்டோகரன்சிகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதால் பலரும் நஷ்டத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
இந்தச் சரிவுக்கு என்ன காரணம், சரிவு தொடருமா அல்லது இந்தச் சரிவிலிருந்து பிட்காயின் மீண்டுவருமா என்கிற கேள்வி களுடன் கிரிப்டோகரன்சி நிபுணர் அர்ஜுன் விஜய்யிடம் பேசினோம். அவர் விளக்கமாக எடுத்து சொன்னார்.
“கிரிப்டோகரன்சிகளின் வர்த்தகமானது நான்காண்டு சுழற்சிக்கு உள்ளாகி வருகிறது. அதாவது, பங்குச் சந்தைகளில் காணப்படும் சுழற்சி போலத்தான் இதுவும். 2017-ல் பிட்காயின் உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு 2018 சரிய ஆரம்பித்தது. மீண்டும் 2021-ல் உச்சத்தைத் தொட்டது. தற்போது சரிய ஆரம்பித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் சரிவைச் சந்திக்கும் பிட்காயின் அதன்பிறகு புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.
தற்போது கிரிப்டோகரன்சிகள் மட்டுமல்ல, பொதுவாக அனைத்து விதமான ரிஸ்க் உள்ள சந்தைகளுமே சரிவில்தான் இருக்கின்றன. சர்வதேச பங்குச் சந்தைகள் அனைத்தும் இறக்கத்தின் போக்கில் உள்ளன. இதற்குக் காரணம், வரலாறு காணாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்ததுதான். பணவீக்கம் உயர்வின் காரணத்தால் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் ரிஸ்க் உள்ள முதலீடுகளிலிருந்து பணத்தை வெளியே எடுத்து வருகிறார்கள். இதனால் பங்குச் சந்தை, கிரிப்டோ ஆகியவைச் சரிவுக்கு உள்ளாகின்றன.
அதுமட்டுமல்லாமல், சில கிரிப்டோகரன்சிகள் திவாலாகி சிக்கலுக்குள்ளாகும்போது அது மொத்த கிரிப்டோ சந்தையிலும் ஒருவிதமான அச்சத்தை உண்டாக்கிவிடுகிறது. அதன் காரணமாகவும் கிரிப்டோகரன்சிகள் கணிசமான சரிவுக்கு உள்ளாகின்றன. முன்பு, லுனார் கிரிப்டோ திவாலானது. தற்போது செல்ஷியஸ் என்ற நிறுவனம் திவாலாகும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது.
இதுபோன்ற நெருக்கடியான சூழல்களில் மதிப்பு குறைவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. ஃபண்டமென்டல் காரணிகள் வலுவாக உள்ள கிரிப்டோகரன்சிகள் இந்த நெருக்கடியைச் சமாளித்து மீண்டுவந்து புதிய உச்சத்தை எட்டும். ஃபண்டமென்டல் காரணிகள் பலவீனமாக இருக்கும் கிரிப்டோக்கள் சந்தையிலிருந்து காணாமல் போகும்.
பிட்காயின், எத்ரியம் போன்றவை ஏற்கெனவே சில சுழற்சிகளைப் பார்த்துள்ளன. அவை 80-85% சரிவைச் சந்தித்த பிறகும்கூட மீண்டுவந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளன. எனவே, கிரிப்டோகளைப் பொறுத்தவரை, எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள், விலை வீழ்ச்சியின்போதும் பயன்படுத்துகிறார்களா என்ற தெளிவை எந்த காயின்கள் தருகிறதோ, அதில் மட்டுமே முதலீடு செய்யலாம். அடுத்த வருடம் இருக்குமா என்கிற சந்தேகத்தை எழுப்புகிற காயின்களைத் தவிர்த்துவிடுங்கள்” என்றார் அர்ஜுன் விஜய்.
நன்கு யோசித்துதான் கிரிப்டோகரன்சியில் பணம் போட வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது!