தாங்கள் தான் எதிர்க்கட்சி என்று பாஜக சொல்லிவரும் சூழ்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒற்றை தலைமையை நோக்கி செல்கிறது. இந்த நடவடிக்கை அதிமுகவுக்கு எந்த அளவிற்கு கைகொடுக்கும்?
சட்டப்பேரவையில் 65 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதான எதிர்கட்சியாக இருக்கிறது அதிமுக. ஆனால் அவர்களது செயல்பாடு பிரதான எதிர்க்கட்சியாக இல்லை என்ற குறைபாடு அதிமுக தொண்டர்கள் மத்தியிலேயே உள்ளது. அதிமுகவின் இந்த செயல்பாடுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பாரதிய ஜனதா கட்சி தீவிர முனைப்புக் காட்டுகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசை எதிர்த்து நாள்தோறும் அறிக்கைகள் விட்டு தீவிரமான செயல்பாடுகள் மேற்கொண்டு வருகிறார்.
அதிமுகவும் சொத்துவரி உயர்வுக்கு போராட்டங்கள் நடத்துவது, முன்னாள் அமைச்சர் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது, தினம் தினம் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி அறிக்கை விடுவது, அதற்கான தீர்வுகளை காண்பது என்று அதிமுக செய்து வந்தாலும் தொண்டர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கையை எதிர்க்கட்சியாக ஏற்படுத்த முடியாத நிலையில் அதிமுக உள்ளது.
அதனாலே தொடர்ச்சியாக தமிழகத்தில் இருக்கக்கூடிய பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சியாக சித்தரித்து வரும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு முக்கியமான ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து மிக நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது. கட்சித் தொண்டர்கள் மத்தியில் நீண்ட நெடுநாட்களாக ஒற்றை தலைமை கோரிக்கை இருந்து வந்த நிலையில் கட்சியின் நிர்வாகிகள் அது குறித்து பேசியிருப்பது கட்சி தொண்டர்கள் இடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்பொழுது அதிமுக முன் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை யார் அந்த ஒற்றை தலைமை என்பதுதான். அந்த ஒற்றை தலைமை ஓ.பன்னீர்செல்வமா அல்லது எடப்பாடி பழனிசாமியா என்ற கேள்வியும் எழுகிறது. அல்லது வேறு யாருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? அதை முடிவு செய்து யாருக்கு அதிமுக அந்த வாய்ப்பு கொடுக்கப் போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இப்படி பட்ட நிலையில் 2024ல் தான் பாஜகவுடன் கூட்டணியா இல்லையா என்பது தெரியவரும் என்று சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
பிரதான எதிர்க்கட்சியாக தங்களை நிரூபிக்க இந்த ஒற்றை தலைமை அதிமுகவுக்கு கைகொடுக்குமா? அல்லது ஒற்றை தலைமை என்ற பேச்சே பிரச்சனையை உருவாக்குமா? என்பதை நாட்கள் செல்ல செல்ல பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்களேன்: அதிமுகவுக்கு ஒற்றை தலைமைதான் தேவை என விவாதம் – ஜெயக்குமார் பேட்டிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM