பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியில் சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தியிருகிறார்” என இன்று ட்வீட் செய்திருந்தது. அதைத் தொடர்ந்து, டெல்லியில் இன்று இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பிரதமர் அலுவலகத்தின் இத்தகைய அறிவிப்பு குறித்து ட்விட்டரில் மோடியை விமர்சனம் செய்திருந்தார்.
ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், “8 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்று இளைஞர்களை ஏமாற்றியது போல், தற்போது 10 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும் கூறப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், வேலைகளை உருவாக்குவதைவிட, வேலைகள் பற்றிய செய்திகளை உருவாக்குவதில் தான் பிரதமர் வல்லவர்” என மோடியை விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், ராகுல் காந்தியின் இத்தகைய ட்வீட்டுக்குப் பதில் விமர்சனம் செய்திருக்கிறார்.
பிரதமர் அலுவலகத்தின் வேலைவாய்ப்பு செய்தி குறித்துப் பேசிய அனுராக் தாகூர், “பிரதமர் மோடிக்கு நன்றி. இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். நாட்டின் இளைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால், ராகுல் காந்திக்கு ஏன் இவ்வளவு கோபம். முதலில் உங்கள்மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறைக்கு சரியான பதில்களை நீங்கள் கூறவேண்டும். இதுபோன்ற முடிவை வரவேற்பதற்குப் பதிலாக, மற்ற பிரச்னைகளைக் கையாள்வதில் அவர் மிகவும் பிஸியாக இருப்பதாக நான் நினைக்கிறேன்” என ராகுலை விமர்சித்திருக்கிறார்.