திருவனந்தபுரம் :கேரளாவில், நான்கு மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு டஜன் முட்டைகள் இட்ட கோழியை பரி சோதிக்க, பல்கலை முடிவு செய்துள்ளது.
கேரளாவின் ஆலப்புழா அருகே, புன்னம்புறா கிராமத்தில் பிஜு என்பவர் 25 கோழிகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை அவர் கோழிகளுக்கு தீனி வைத்துக் கொண்டிருந்த போது, ஒரு கோழி மட்டும் தரையில் பள்ளம் தோண்டி அதில் ஒரு முட்டை இட்டது.
வழக்கமாக முட்டை இட்ட சற்று நேரத்தில், கோழி அந்த இடத்தை விட்டு சென்று விடும். ஆனால், அந்தக் கோழி மீண்டும் ஒரு முட்டை இட்டது, பிஜுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அந்தக் கோழி அடுத்தடுத்து முட்டை இட்டுக் கொண்டே இருந்தது. காலை 8:30ல் இருந்து மதியம் 12:30 மணி வரை, 24 முட்டைகளை இட்டது.
இதை நம்ப முடியாத பிஜு, கால்நடை பல்கலைக்கு தகவல் தெரிவித்தார். கால்நடை உதவி பேராசிரியர் பினோஜ் சாக்கோ உடனடியாக பிஜு வீட்டுக்கு வந்து, ஒரே நாளில் 24 முட்டையிட்ட கோழியையும், முட்டைகளையும் பரி
சோதனை செய்தார். ‘இது, ஹார்மோன் சமநிலையின்மையால் நடந்திருக்கலாம்’ என கூறிய அவர், முழுமையாக பரிசோதிக்க அந்தக் கோழியை பல்கலைக்கு துாக்கிச் சென்றார்.
Advertisement