“குடும்ப உறுப்பினர்கள் தலையீடு கூடாது” – 100வது நாளில் சென்னை மேயர் பிரியா ராஜன் சிறப்புப் பேட்டி

இந்தியாவில் மிகவும் பழமையான மாநகராட்சி, சென்னை மாநகராட்சியாகும். 334 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க சென்னை மாநகராட்சியின் மிகவும் இளம் மேயராக திமுகவைச் சேர்ந்த பிரியா ராஜன் கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். மேயராக பதவியேற்று இன்றுடன் 100 நாட்களை நிறைவு செய்கிறார் மேயர் பிரியா.

இந்த 100 நாட்களின் கற்றுக் கொண்டது, மாமன்றம் கூட்டம், கவுன்சிலர்களின் செயல்பாடு, சென்னை மாநகராட்சியின் முக்கியப் பிரச்சனைகள், எதிர்காலத்தில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’ தளத்துக்கு சென்னை மேயர் பிரியா ராஜன் அளித்த சிறப்புப் பேட்டி இது…

இந்த 100 நாட்களின் உங்களின் அனுபவம் எப்படி இருந்தது?

“நாட்டின் பழமையான நகராட்சி அமைப்பாகவும், உலகில் 2-வது பழமையான நகராட்சி அமைப்பாக உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி மக்களுக்கு சேவையாற்ற கிடைத்த வாய்ப்பு என இந்த மேயர் பொறுப்பை நினைக்கின்றேன். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. பொதுமக்களின் குறைகளை தீர்ப்பது ஒரு மனநிறைவை தருகிறது.”

பெண் மேயராக உங்களால் சுதந்திரமாக இயங்க முடிகிறாதா?

“கண்டிப்பாக முழு சுதந்திரத்துடன் எந்த தலையீடும் இன்றி செயல்பட முடிகிறது. முக்கியப் பிரச்சனைகளுக்கு நானே முழு சுதந்திரத்துடன் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய தீர்வு காண்கின்றேன். பெண் மேயர் , ஆண் மேயர் என்ற பாகுபாடு இருப்பதாக நான் கருதவில்லை.”

சென்னை மாநகராட்சியின் தற்போதையை நிலை பற்றி நீங்கள் அறிந்துகொண்டது என்ன?

“பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் எந்த நிலையில் என்பதை அதிக அளவு தெரிந்து கொண்டேன். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி வருவாய் பெருக்குவதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். தற்பொழுது வரி வருவாய் வசூலிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் களையப்பட்டு நிதி நிலைமையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.”

மாமன்ற கூட்டங்களை நடத்துவதில் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

“ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அதிக அளவு உள்ள காரணத்தினால் மன்ற கூட்டம் நடத்துவது எளிதாக உள்ளது . மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டு ஒரு சமமான நிலையில் மன்ற கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் பெரிய சவால் எதுவும் இல்லை என நான் கருதுகிறேன்.”

100 நாட்களில் உங்களிடம் அதிகம் கொண்டு வரப்பட்ட பிரச்சினைகள் என்ன?

“100 நாட்களில் மழை நீர் வடிகால் துறை குறித்த பிரச்சினைகள் அதிக அளவில் எனது கவனத்திற்கு வந்துள்ளன. நாங்கள் அதனை போக்க பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் ரூ.4,000 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டு வருகிறோம்.”

மாமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு எந்த நிலையில் உள்ளது?

“மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பொறுப்பினை உணர்ந்து சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் தங்கள் வார்டுகளில் உள்ள மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாமன்ற உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்கள் தலையீடு இல்லாமல் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.”

உடனடியாக கவனிக்க வேண்டிய துறை என்று நீங்கள் நினைப்பது எந்த துறை?

“மழைநீர் வடிகால் துறை. ஏனெனில் பெருநகர சென்னை மாநகராட்சி கடந்த காலங்களில் பெரும் மழை பெய்யும் பொழுது தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உட்படுகின்றனர். அதனை கருத்தில் கொண்டு மழைநீர் வடிகால் துறையை முக்கியமாக கருதி தாழ்வான பகுதிகள் கண்டறிந்து மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”

எதிர்காலத்தில் எதற்கு முக்கியதுவம் அளித்து சென்னை மாநகராட்சி செயல்படும்?

“உலக நகரங்களுக்கு இணையாக சுற்றுச்சூழல் மாசு இல்லாத சென்னை மாநகரை உருவாக்க நாங்கள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றோம்”

இந்த முறையாவது வெள்ளத்தில் இருந்து சென்னை தப்புமா?

“பெருநகர சென்னை மாநகராட்சி மழை நீர் வடிகால் துறை மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடியும் என நம்புகிறோம்.”

சென்னை மக்களிடம் நீங்கள் வைக்க விரும்பும் கோரிக்கை என்ன?

“குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.