தஞ்சையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியர் படுகொலைக்கு சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கூட்டம் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்திற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் தலைமையேற்றுள்ளார்.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தின் முதள் நாளான இன்று நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தில், “தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்யா, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வந்தவாசி பகுதியைச் சேர்ந்த மோகன் ஆகியோரின் காதல் திருமணம் ஒரு வாரத்துக்கு முன்பு தான் நடந்தது.
நேற்றைய தினம் சரண்யாவின் சகோதரனும், அவர் மைத்துனனும் புது மண தம்பதியரை நயமாக பேசி வீட்டுக்கு வரவழைத்து கொடூரமாக இருவரையும் படுகொலை செய்துள்ளனர். இக்கோர படுகொலையை சிபிஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த படுகொலையில் கூட்டு சதிக்கு வாய்ப்பு உள்ளது. எனவே, இப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் காவல்துறை கைது செய்து உரிய முறையில் வழக்கு நடத்திட வேண்டுமெனவும், மோகனின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், மேலும், சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவித்து அரசு பரப்புரை செய்ய வேண்டுமென சிபிஐ(எம்) மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.