சிகாகோ: அமெரிக்காவின் சிறந்த இந்திய உணவகமாக, ‘சாய் பானி’ என்ற உணவகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் பியர்டு அறக்கட்டளை, ஆண்டு தோறும் மிகச் சிறந்த உணவகங்கள், சமையல் கலைஞர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக, விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கவில்லை. இந்தாண்டு, சிகாகோ நகரில் சிறந்த உணவகங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், வடக்கு கரோலினாவில், ஆஷ்வில்லி நகரிலிருக்கும் இந்திய உணவு வகைகளுக்கு பிரசித்தி பெற்ற சாய் பானி, மிகச் சிறந்த உணவகம் என்ற விருதை தட்டிச் சென்றது. இவ்விழாவில், சிறந்த சமையல் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
சாய் பானி என்றால் தேனீர் தண்ணீர் என்று பொருள். இந்த உணவகத்தில் சமோசா, கச்சோரி, பானி பூரி, பாவ் பாஜி, பேல் பூரி, வடா பாவ், பல வகை தேனீர் உட்பட இந்தியாவின் சுவை மிகுந்த உணவு வகைகள் கிடைக்கின்றன.சமையல் கலைஞரான மெஹர்வான் ஈரானியின் தாத்தா, குஜராத் மாநிலம் ஆமதாபாதில் ஒரு உணவகத்தை நடத்தி வந்துள்ளார். அவர் நினைவாக, மெஹர்வான் ஈரானி, அமெரிக்காவில் சாய் பானி குழுமத்தை துவக்கி, பல்வேறு உணவகங்களை நடத்தி வருகிறார்.
Advertisement