ரஷ்ய ஜனாதிபதி புடினுக்காக பிரித்தானியாவில் உளவு வேலை பார்த்த ரஷ்ய உளவாளியை காட்விக் விமான நிலையத்தில் வைத்து பிரித்தானிய பொலிஸார் கைது செய்தனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகளில், உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியா பல முன்னெடுப்புகளை செய்து வரும் நிலையில், ரஷ்யர்கள் மிகப்பெரிய சைபர் தாக்குதலை பிரித்தானியாவில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்து பிரித்தானிய பாதுகாப்பு உளவுத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தது.
இந்தநிலையில், காட்விக் விமான நிலையத்தில் 40 வயதுடைய சந்தேகத்திற்குரிய நபர், பிரித்தானியாவை விட்டு வெளியேற முயன்ற போது திங்கள்கிழமை அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் உடனடியாக மேற்கு லண்டனில் உள்ள ஹேமர்ஸ்மித் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர் மீது எதிரி அரசுக்கு உளவு பார்த்தது மற்றும் நாசவேலைகளுக்கு திட்டமிட்டது போன்ற பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கைது நடவடிக்கையானது மெட் பொலிஸாரின் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளை SO15 மற்றும் MI5-இன் ஆகியவற்றின் கூட்டு விசாரணையைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ரூவாண்டாவிற்கான முதல் விமானம் இறுதி நிமிடத்தில் ரத்து: பிரித்தானிய அரசுக்கு தொடரும் சட்டசிக்கல்
பிரித்தானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் எங்கு செல்ல விரும்பினார் என்பது குறித்து தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.