`100 மாணவர்களுக்கு நான் சிலம்பம் மாஸ்டர்!’ – சர்வதேச சிலம்ப போட்டியில் 5 தங்கம் வென்ற ப்ளஸ் டூ மாணவி

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி வாசவி காலனியைச் சேர்ந்தவர் கருப்பையா. பால் வியாபாரியான இவர் சிறுவயதில் இருந்தே சிலம்பம் சுற்றுவதில் ஆர்வம் கொண்டவர். மேலும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து மாவட்ட அளவில் நடந்த ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

ரக்ஷிதா பாரதி

உடற்பயிற்சி, விளையாட்டு மீதான ஆர்வத்தில் தனது இளையமகள் ரக்ஷிதா பாரதி 8-ம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போதே சிலம்பம் கற்றுக் கொடுக்கத் தொடங்கியுள்ளார். இதையடுத்து அவருக்கு சிலம்பம் மீது அதிக ஆர்வம் ஏற்பட, அன்னஞ்சி வீரமுத்து மாஸ்டரிடம் சிலம்பம் கற்க தொடங்கியுள்ளார். பள்ளிக் காலங்களில் இருந்தே மாவட்ட, மாநில, தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை நேபாளத்தில் நடந்த சர்வதேச அளவிலான போட்டியில் ரக்ஷிதா பாரதி(17) பங்கேற்றார். பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். இதில் ரக்ஷிதா பாரதி ஒற்றைச் சிலம்பம், சுருள் வாள், இரட்டை சுருள் வாள், வேல் கம்பு, தீப்பந்தம் ஆகிய பிரிவுகளில் போட்டியிட்டார். போட்டியிட்ட அனைத்துப்பிரிவுகளிலும முதலிடம் பெற்று ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றார்.

சிலம்ப வீரர்கள்

சர்வதேசப் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய ரக்ஷிதா பாரதிக்கு தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வரவேற்று அளிக்கப்பட்டது. பிறகு அவருக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். விளையாட்டு வீரர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ரக்ஷிதா பாரதியிடம் பேசினோம். ’’என் தந்தையிடம் இருந்து எனக்கு சிலம்பம் கற்க ஆர்வம் ஏற்பட்டது. இதனால் தீவிரமாக 3 ஆண்டுகள் பயிற்சி எடுத்துக் கற்றுக்கொண்டேன். நான் இப்போது 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதியுள்ளேன். தற்போது நான் 100 மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்றுவித்து வருகிறேன். டெய்லரிங் டீச்சராக உள்ள என் அம்மா லட்சுமி ஈஸ்வரி, அக்கா சக்திபாரதி ஆகியோரும் எனக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

வரவேற்பு

நேபாளத்தில் போட்டி முடிந்து தேனி வந்த எனக்கு மாலை அணிவித்து மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னைப் போல ஏராளமான மாணவ, மாணவிகளுக்கு சிலம்பத்தை பயிற்றுவித்து சிலம்பத்தை உலகளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எனது இலக்கு’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.