பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், அதானி குழுமம் கால்பதித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. `பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததால்தான், மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அதானி குழுமத்துக்கு ஒதுக்கப்பட்டது’ என்ற பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் இலங்கையின் மின் வாரியத் தலைவர் ஃபெர்டினாண்டோ. அவர், நேற்று முந்தினம் (ஜூன் 13) தனது பதவியையும் ராஜினாமா செய்திருப்பது மேலும் சர்ச்சையாகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இதுவரை நடந்து என்ன?
இலங்கை மின் திட்ட ஒப்பந்தம்!
கடந்த ஆண்டு இலங்கையில் மின் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டது. மன்னார், பூநகரி பகுதிகளில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான இந்தத் திட்டத்தின் மதிப்பு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர். இந்தத் திட்டம் தொடர்பாக நாடாளுமன்ற பொது நிறுவனங்களுக்கான குழுக் கூட்டத்தில் பேசிய மின் வாரியத் தலைவர் ஃபெர்டினாண்டோ, “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதானி குழுமத்துக்கு இந்த மின் உற்பத்தி திட்டங்களை வழங்கச் சொல்லி அழுத்தம் தருவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே என்னிடம் கூறினார்” என்று பேசியது இலங்கை அரசியல் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் பரபரப்பைக் கிளப்பிருக்கிறது.
போர்க்கொடி தூக்கிய எதிர்க்கட்சிகள்!
இரு நாட்டு எதிர்க்கட்சிகளும் இது குறித்து விமர்சனங்களையும், கண்டனங்களையும் பதிவு செய்துவருகின்றன. இலங்கையைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள், “டெண்டர் ஏதுவுமின்றி எப்படி ஒப்பந்தத்தை அதானிக்கு வழங்கலாம். இதற்காக ஆளுங்கட்சி சட்டத்தையே மாற்றியிருக்கிறது” என்று கோத்தபயவுக்கு எதிராகக் கொடி தூக்கியிருக்கிறார்கள். வரும் நாள்களில் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து ஆளுங்கட்சிக்கு எதிராகக் குரல் கொடுக்க இலங்கையின் எதிர்க்கட்சிகள் தயாராகிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் சொல்லப்படுகின்றன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தியும் இந்த விவகாரம் தொடர்பாகத் தனது விமர்சனங்களைப் பதிவு செய்திருக்கிறார்.
பல்டி அடித்த பெர்டினண்டோ!
இதற்கிடையில் ஜூன் 11-ம் தேதி அன்று, தனது ட்விட்டர் பக்கத்தில் பெர்டினண்டோவின் கருத்தை முற்றிலுமாக மறுத்திருந்தார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே. அதே நாளில், தனது கருத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார் பெர்டினண்டோ. அடுத்த இரண்டு தினங்களில் தனது மின் வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பெர்டினண்டோ. சொந்தப் பிரச்னை காரணமாகப் பதவி விலகுவதாகத் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் அவர்.
அதானி குழுமத்தின் விளக்கம்!
இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில், `இலங்கை போன்ற அண்டை நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை எங்கள் நிறுவனம் விரும்புகிறது. இலங்கைக்கு உதவுவதை அவசியமாக நாங்கள் பார்க்கிறோம். இந்தப் பிரச்னை ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தால் தீர்க்கப்பட்டுவிட்டது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அரசியலை உற்று நோக்கும் சிலர், “இந்தியப் பிரதமர் மோடியின் அழுத்தம் காரணமாகத்தான் அதானி குழுமத்துக்கு டெண்டர் ஏதுமின்றி ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக ஃபெர்டினண்டோ கூறிய மூன்றாவது நாளில் அவர் ராஜினாமா செய்திருக்கிறார். சொந்த விஷயத்துக்காகத் தான் ராஜினாமா செய்திருப்பதாக அவர் தெரிவித்தாலும், இதன் பின்னணியில் ஏதோவொன்று நிச்சயம் நடந்திருக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரச் சிக்கல் இன்னும் சரி செய்யப்படாத நிலையில், கோத்தபயமீது இப்படியான குற்றச்சாட்டு எழுந்திருப்பது அவருக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்திருக்கிறது.
அதானி, கடந்த ஆண்டு அக்டோபரில் இலங்கை வந்திருந்தபோதே, `மோடியின் நண்பர் என்பதற்காகத்தான் அதானிக்கு மின் உற்பத்தி ஒப்பந்தங்கள் வழங்கப் போகிறார் கோத்தபய’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. தற்போது இந்தப் பிரச்னை அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது. இதில், தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, அதானி குழுமத்துக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதன் முழுப் பின்னணி தெரியவரும்” என்கிறார்கள்.