எரிபொருள் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளுக்கும் இந்த வாரம் முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொது அலுவலக விடுமுறையாக பிரகடனப்படுத்தப்படுகின்றது.
அதற்கான சுற்று நிருபம் இன்று இரவு வெளியிடப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய வர்த்தமானி
இதேவேளை, விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே அரச ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
பல தசாப்தங்களில் மோசமான நிதி நெருக்கடியுடன் போராடும் இலங்கை எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், உணவுப் பயிரிடுவதற்கும் அரச ஊழியர்களை ஊக்குவிக்க அரசாங்கம் நேற்று தினம் நான்கு நாள் வேலை வாரத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை அரச துறையில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் பணியாற்றுகின்ற நிலையில் விவசாயத்தில் அரச ஊழியர்களை ஊக்குவிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடுமையான அந்நிய செலாவணி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் எரிபொருள், உணவு மற்றும் மருந்து ஆகியவற்றின் முக்கியமான இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் திணறி வருகின்றது.
நெருக்கடியை தீர்க்க அரசாங்கத்தின் நடவடிக்கை
நாட்டின் 22 மில்லியன் மக்களில் பலர் பெட்ரோல் நிலையங்களில் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது மற்றும் பல மாதங்களாக நீண்ட மின்வெட்டை எதிர்கொண்டுள்ளனர்.
எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க பயணத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.