பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மேகேதாட்டு அணை திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
“மேகேதாட்டு திட்டத்துக்கு எதிரான தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அத்திட்டம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது” என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 15 கூட்டங்களை நடத்தியுள்ளது. அப்போது தமிழக அரசு மேகேதாட்டு திட்டத்துக்கு எதிராக பேசவில்லை.
தற்போது அரசியல் உள்நோக்கத்துடன் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கிறது. தமிழக அரசு காவிரியை வைத்து அரசியல் செய்கிறது.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கும் விஷயங்கள் குறித்து அந்த அமைப்பே முடிவெடுக்கும். இதில் தமிழக அரசு தலையிட முடியாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் சுதந்திரத்தில் தமிழக அரசு தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இந்த விவகாரத்தில் ஆணையம் தனது அதிகாரத்தை மீறி செயல்படவில்லை’’ என்றார்.