சென்னையை சேர்ந்த பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் கல்யாணி நித்யானந்தன் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 87.
சென்னையில் கடந்த 1935-ல்பிறந்த மருத்துவர் கல்யாணி நித்யானந்தனின் பூர்வீகம் மதுரை அடுத்த மேலூர். சென்னை லேடி வெலிங்டன் பள்ளி, ராணி மேரி கல்லூரியில் படித்த பிறகு, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம்பயின்றார். பல்கலைக்கழகத்திலேயே முதலாவதாக வந்து தங்கப்பதக்கம் பெற்றார். ஸ்டான்லியிலேயே முதுகலைப் படிப்பை முடித்தார்,
தமிழகத்தில் முதன்முதலாகமாரடைப்பு நோய் அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்குவதற்கான பயிற்சிக்காக தமிழக அரசால் மும்பைக்கு அனுப்பப்பட்டார். அதைத் தொடர்ந்து, சென்னைராயப்பேட்டை மருத்துவமனையில் 1969-ல் இப்பிரிவு தொடங்கப்பட்டது. இந்திய இதய மருத்துவக் கழகத்தில் வாழ்நாள் உறுப்பினராக இருந்த கல்யாணி நித்யானந்தன், 20 ஆண்டுகளுக்கு மேல்உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் நடந்த மருத்துவக் கருத்தரங்குகளில் உரையாற்றியுள்ளார். பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
ஓய்வுபெற்ற பிறகு, பழங்குடியின மருத்துவமனையில் பணியாற்றினார். ஆங்கிலத்தில் மட்டுமே மருத்துவக் கட்டுரைகள் எழுதிவந்த இவர் முதன்முதலில் தமிழில் எழுதிய ‘சில தருணங்களும் சில நிகழ்வுகளும்’ நூல், ‘இந்து தமிழ் திசை’ வெளியீடாக வந்தது.
இவரது கணவர் நித்யானந்தன் ஏற்கெனவே காலமாகிவிட்டார். வெளிநாட்டில் உள்ள மகன் அஸ்வத், மகள் நிருபமா வந்த பிறகு,இறுதிச் சடங்கு நடக்க உள்ளது. கல்யாணி நித்யானந்தன் மறைவுக்கு பல்வேறு மருத்துவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.