மகாராஷ்டிராவுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க சென்ற அமைச்சரும், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரேவை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை அங்கு சென்றார். மும்பையில் உள்ள இந்தியக் கடற்படை தளத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அவரை, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட சில அமைச்சர்கள் வரவேற்க சென்றனர். அப்போது அவர்களுடன் மகாராஷ்டிரா சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரேவும் சென்றிருந்தார். பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் அங்கு வந்த அவரது சிறப்புப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் (எஸ்பிஜி), வரவேற்க வந்த ஒவ்வொருவரையும் சோதனை செய்து உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அங்கு வந்த ஆதித்யா தாக்கரேவை எஸ்பிஜி அதிகாரிகள் உள்ளே அனுமதிக்க மறுத்து வெளியே நிறுத்தினர். இதனைக் கண்ட முதல்வர் உத்தவ் தாக்கரே எஸ்பிஜி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “ஆதித்யா தாக்கரே எனது மகன் என்பதால் அவரை இங்கு அழைத்து வரவில்லை. அவர் ஒரு அமைச்சர். பிரதமரை வரவேற்க அவருக்கு உரிமை இருக்கிறது” என அவர் கூறினார். ஆனால், எஸ்பிஜி அதிகாரிகளோ ஆதித்யாவின் பெயர் வரவேற்பு பட்டியலில் இல்லாததால் தான் அவரை தடுத்து நிறுத்தினோம் எனக் கூறினர். சிறிது நேர வாக்குவாதத்துக்கு பிறகு ஆதித்யா உள்ளே அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் முதல்வர் உத்தவ் தாக்கரே கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ஆதித்யா தாக்கரேவுக்கு நெருக்கமான சிலர் கூறுகையில், “பிரதமரை வரவேற்க செல்பவர்களின் பட்டியலில் ஆதித்யா தாக்கரேவின் பெயர் இல்லை. பிரதமரை ஆதித்யா வரவேற்பது திடீரென எடுக்கப்பட்ட முடிவு. எனவே எஸ்பிஜி அதிகாரிகள் அவரை தடுத்துள்ளனர். விளக்கம் அளிக்கப்பட்ட பிறகு அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டு விட்டார். இது மிக சாதாரண விஷயம் தான். இதனால் ஆதித்யா தாக்கரேவுக்கு எந்த மன வருத்தமும் இல்லை” எனத் தெரிவித்தனர்.
பாஜகவுடன் நீண்டகாலமாக கூட்டணியில் இருந்த சிவசேனா, 2019 மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அந்த உறவை முறித்துக் கொண்டது. தற்போது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியில் உள்ளது. பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் சிவசேனாவும், அதன் தலைவர் உத்தவ் தாக்கரேவும் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM