கோவில்பட்டி: கயத்தாறு அருகே அரசன்குளம் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதுமாப்பிள்ளை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ராஜபாளையத்தைச் சேர்ந்த பாண்டி செல்வன்(28) என்பவர் ஓட்டினார். ஆம்னி பேருந்தில் இரு ஓட்டுநர்கள் ஒரு கிளீனர் மற்றும் 28 பயணிகள் பயணம் செய்தனர்
திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறையடுத்த அரசங்குளம் விலக்கு அருகே நேற்று நள்ளிரவு வந்த போது ஆம்னி பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.
இதில், ஆம்னி ஓட்டுநர் பாண்டி செல்வன், பேருந்தில் பயணம் செய்த நாகர்கோவில் கீழே வண்ணான் விளையை சேர்ந்த குமரேசன் மகன் சிவராமன் (30) மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த ஜான்சன் (50) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த 3 பேரின் உடல்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், காயமடைந்தவர்களில் 7 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 4 பேர் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த சிவராமனுக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.