சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர் சம்பா மாவட்டத்தில் ராகுல் சாஹி என்ற 11 வயது சிறுவன் தனது வீட்டின் பின்புறத்தில் இருந்த 80 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சிறுவன் கிணற்றில் சுமார் 60 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டார். இதுகுறித்து மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) அதிகாரிகள், ராணுவம், காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் உட்பட மொத்தம் 500 பணியாளர்கள் வெள்ளிக்கிழமை முதல் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த சிறுவனுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது. இதையொட்டி 104 மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு அந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்ட இருக்கிறார். சிறுவன் மீட்கப்பட்ட பின்னர், உடனடியாக பிலாஸ்பூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருப்பதாவது, “ அனைவரின் பிரார்த்தனையாலும், மீட்புக் குழுவினரின் இடைவிடாத மற்றும் அர்ப்பணிப்பு முயற்சியாலும், ராகுல் சாஹு பத்திரமாக ஆழ்துளை கிணற்றிலிருந்து வெளியேற்றப்பட்டார். பாதுகாப்பாக, அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.