கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தர், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய் வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், இப்போது உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். நேற்று அவர் அமெரிக்கா செல்லும் முன்பாக விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
”என் வாழ்க்கையில நான் உங்க முன்னாடி இங்கே நிக்குறதுக்கு காரணம், எல்லாம் வல்ல இறைவன்தான். என்னுடைய தன்னம்பிக்கையை மீறி, கடவுள் நம்பிக்கை. உயர் சிகிக்சைக்காக நான் அமெரிக்கா போறேன். வாழ்க்கையில் எதையும் நான் மறைத்தது கிடையாது. என் முகத்துலதான் வச்சிருப்பேன் தாடி. என் மனசில, என் வாழ்க்கையில எதையுமே வச்சதே இல்ல மூடி… விதியை மீறி, கர்மாவை மீறி எதுமே நடக்காது. ஆனாலும் பலரின் பிரார்த்தனைகளால் இங்கே நிக்கறேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றிகள். எந்த வதந்தியையும் நம்பாதீர்கள். நான் நல்லா இருக்கேன். சந்தோஷமா இருக்கேன்.
நான் வெளிநாடு போகக்காரணமே, என் மகன் சிலம்பரசன்தான். ”அப்பா உங்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வெளிநாட்டுக்கு நான் அழைச்சிட்டு போவேன்னு ஒத்தைக்கால்ல நின்னதாலதான் என் மகனுக்காகத்தான் நான் வெளிநாடே போறேன். இதுக்காக அவர் தனது படத்தின் இசைவெளியீட்டு விழா, படப்பிடிப்பு இதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு அமெரிக்காவில் 12 நாள்களாகத் தங்கியிருந்து தன் குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் என் மகனைப் பார்க்கும்போது ஒண்ணே ஒண்ணு தோணுது. பல குழந்தைகள் அவங்களோட அப்பா அம்மாவை நல்லா வச்சிருக்காங்க. அவங்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கறேன். ஏன்னா, அப்பா அம்மாவை முதியோர் இல்லத்துக்கு சேர்த்துவிடும் இந்த கலிகாலத்தில் சிலம்பரசன் என்னைப் பெருமைப்படுத்தியிருக்கார். இப்படி ஒரு பையனை இந்த ஜென்மத்தில் நான் அடைந்தது பெரிய பாக்கியம். அவனை ஒரு சிஷ்யனாக உருவாக்கிய குரு என்ற முறையிலும் பெருமைப்படுறேன்.” என கண்களில் கண்ணீர் மல்க பேசினார்.