புதுடெல்லி: மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேரை தேர்வு செய்து நியமிக்கும்படி பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத் தின்போது 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பாஜக உறுதி அளித்தது. ஆனால் வாக்குறுதியை நிறை வேற்றவில்லை என்றும் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு மீது, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அரசுத் துறைகளிலும், காலி பணியிடங்கள் அதிக அளவில் உள்ளதாக அவ்வப்போது செய்தி வெளியாகின்றன. இது குறித்து எதிர்க்கட்சிகளும் அடிக்கடி மத்திய அரசை விமர்சித்து வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் தொழில் முனைவு மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறிவருகிறது.
அடுத்த மக்களவை தேர்தல் 2024-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளன.
பல மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்களும் நடைபெறவுள்ளன. தேர்தல் பிரசாரத்தில் வேலைவாய்ப்பின்மையை எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய பிரச்சினையாக எழுப்பும் வாய்ப்புள்ளது. அதனால், மத்திய அரசின் பல துறைகளும், தங்களின் காலிபணியிட விவரங்களை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டன. இதன் நிலவரத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
அதன்படி அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 லட்சம் பேரை தேர்வு செய்து பணியமர்த்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார் என பிரதமர் அலுவலகம் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.