மதுரை: தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளபடி, குடும்பத்தலைவிகளுக்கு, மாணவிகளுக்கு விரைவில் ரூ.1000 உதவித்தொகை வழங்கப் படும் என அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கீதா ஜீவன் அறிவித்து உள்ளனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள, குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு குறித்த எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்.
மேலும், ரூ.1000 ஊக்கத்தொகை தரும் திட்டத்திற்காக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தவர், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது என்றும் கூறினார்.
அதுபோல, தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் முதலாமாண்டு மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் அமைச்சர் கீதா ஜீவன் கூறினார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு உதவித்தொகை ரூ.1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள், கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.