கேரளா மாநிலத்தில் சின்னு என்ற அதிசய கோழி 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியை சார்ந்த பிஜு என்பவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட bv – 380 ரக கோழிகளை வாங்கி உள்ளார். அதில் ஒரு கோழி பிஜுவின் மகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையடுத்து அவரது மகள் கோழிக்கு சின்னு என்று பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அண்மையில் கோழி தனது காலை தூக்கி நடக்க, காலில் அடிபட்டிருக்கும் என பிஜு சின்னு கோழியின் காலில் தைலம் போட்டு விட்டுள்ளார். காலை சுமார் 8:30 மணி அளவில் கோழி முதலில் ஒரு முட்டை போட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து 24 முட்டைகளை போட்டு வீட்டாரையே ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இந்த தகவல் அறிந்த பலரும் அதிசய சின்னு கோழியையும் , 24 முட்டைகளையும் பார்க்க பிஜுவின் வீட்டில் குவிந்துள்ளனர். இதை கண்டு ஆச்சரியம் அடைந்த பிஜூ, இந்த தகவலை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அங்கிருந்து கோழி மற்றும் வாத்து பராமரிப்பு துறை உதவி பேராசிரியர் பினோஜ் சாக்கோ, கோழிப் பண்ணைக்கு சென்றார். அங்கு 24 முட்டைகள் போட்ட கோழியை ஆய்வு செய்தார். கோழி போட்ட முட்டைகளையும் பார்வையிட்டார்.
இது பற்றி அவர் கூறும்போது, இது அரிதிலும் அரிதான சம்பவம். கோழிக்கு ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக தொடர்ந்து முட்டை போட்டிருக்கலாம் என கருதுகிறேன். என்றாலும் கோழியை அறிவியல் ஆய்வு செய்ய இருக்கிறோம். அதன்பின்பே 24 முட்டை போட்டது எப்படி என்பதை கண்டுபிடிக்க முடியும் என்றார். 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்ட சின்னு கோழி அதிசய கோழி என சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.