சென்னை: கொடுங்கையூர் லாக்அப் டெத் விவகாரத்தில் மரணமடைந்த ராஜசேகரின் உடலில் 12 இடங்களில் காயங்கள் இருந்தது என அவரது உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றது முதல் கடந்த ஓராண்டில் 6 லாக்கப்டெத்கள் நடைபெற்றுள்ளன. சென்னையில் இரண்டு மாதங்களுக்குள் இரண்டு விசாரணைக் கைதிகள் காவல் நிலையங்களில் உயிரிழந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், திருட்டு வழக்கு ஒன்றில், திருவள்ளூர் மாவட்டம் அலமாதியை சேர்ந்தவர் அப்பு (எ) ராஜசேகர்கொடுங்கையூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மரணமடைந்தார். ஆனால், ராஜசேகருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஆனால், அவரது உடல்நிலை மோசமாக இருந்தால், அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கூட்டிச்சென்ற நிலையில், அவர் வரும் வழியிலேயே ராஜசேகர் உயிரிழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர்,உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த லாக்கப் டெத் காரணமாக, சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், கொடுங்கையூர் காவல்நிலையத்தில், ராஜசேகரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் உயிரிழந்துள்ளது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து, கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் தலைமை காவலர்களான ஜெயசேகர், மணிவண்ணன், முதல்நிலை காவலர் சத்தியமூர்த்தி ஆகியோரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே விசாரணைக் கைதி ராஜசேகர் காவல் நிலையத்தில் உயிரிழந்த வழக்கானது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொடுங்கையூர் லாக்அப் டெத்தில் மரணமடைந்த ராஜசேகரின் உடலில் 12 காயங்கள் இருந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், காயம் காரணமாக அவர் மரணம் அடைந்தாரா என்பதை உறுதியாக கூற முடியாது என்றும் தெரிவித்து உள்ளது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.