தேசிய சீனியர் தடகளம்: தமிழக அணி 'சாம்பியன்'

சென்னை,

சென்னையில் நடந்த தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடைசி நாளில் தமிழக வீரர் பிரவீன், வீராங்கனைகள் தனலட்சுமி, வித்யா ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர்.

மாநிலங்களுக்கு இடையிலான 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 5 நாட்கள் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் தனலட்சுமி (23.27 வினாடி) நட்சத்திர வீராங்கனை ஹிமா தாஸ்சை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார். தங்கப்பதக்கத்தை ருசித்த தனலட்சுமி திருச்சி அருகே உள்ள குண்டூரை சேர்ந்தவர் ஆவார். 100 மீட்டர் ஓட்டத்தில் மகுடம் சூடிய அசாம் வீராங்கனையான ஹிமா தாஸ் இந்த பிரிவில் (23.29 வினாடி) வெள்ளிப்பதக்கமே வெல்ல முடிந்தது. மராட்டியத்தின் ஐஸ்வர்யா (23.72 வினாடி) வெண்கலம் வென்றார்.

5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் மராட்டிய வீராங்கனை சஞ்சிவாணி (16 நிமிடம் 11.46 வினாடி) தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை ஆர்.வித்யா 57.08 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். வித்யா கோவையை சேர்ந்தவர் ஆவார்.

ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் அசாம் வீரர் அம்லான் போர்கோஹைன் (21 வினாடி) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அவர் 100 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கிலி குண்டு எறிதலில் ராஜஸ்தான் வீரர் நீரஜ்குமார் (65.52 மீட்டர்) முதலிடத்தை சொந்தமாக்கினார். 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் டெல்லி வீரர் ஹரேந்திர குமார் (14 நிமிடம் 01.50 வினாடி) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். டிரிபிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல்) பந்தயத்தில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் 17.18 மீட்டர் தூரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு இந்த போட்டியில் பஞ்சாப் வீரர் அர்பிந்தர் சிங் 17.17 மீட்டர் தூரம் தாண்டியதே சாதனையாக இருந்தது.

புதிய சாதனை படைத்த திருவாரூர் மாவட்டம் செட்டிசத்திரம் பெரியார் நகரை சேர்ந்த 21 வயதான பிரவீன் அடுத்த மாதம் அமெரிக்காவில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான தகுதி இலக்கையும் எட்டினார். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் கேரள வீரர் ஜாபிர் (49.76 வினாடி) முதலிடமும், தமிழக வீரர் சந்தோஷ்குமார் (50.16 வினாடி) 2-வது இடமும் பெற்றனர்.

போட்டி முடிவில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் (56 புள்ளி) முதலிடமும், தமிழகம் (54.5 புள்ளி) 2-வது இடமும் பிடித்தன. பெண்கள் பிரிவில் தமிழகம் (75 புள்ளி) முதலிடமும், அரியானா (59 புள்ளி) 2-வது இடமும் பெற்றன. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழக அணி ( 133.50 புள்ளி) கைப்பற்றியது. அரியானா (101.50 புள்ளி) அணி 2-வது இடத்தை பிடித்தது.

பரிசளிப்பு விழாவில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார்கள். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா உள்பட நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.