புதுக்கோட்டை: தேங்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 10.5 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. தேங்காயை வீடுகளில்நேரடியாக பயன்படுத்துவதுடன், எண்ணெய், பவுடர், பால் என பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்டபொருட்களாகவும் மாற்றி விற்பனை செய்யப்படுகிறது.
தென்னை மரங்கள் விவசாயிகளுக்கு நிரந்தர வாழ்வாதாரமாக இருந்து வருவதால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தநிலையில், கடந்த 2 மாதங்களாக தேங்காய் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 2 மாதங்களுக்கு முன் ஒரு தேங்காய் ரூ.15-க்குவிற்ற நிலையில், கடந்த 2 மாதங்களாக ரூ.7 ஆக விலை சரிந்துள்ளது. இதனால், தேங்காய் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தேங்காய்க்கு உரிய விலையைநிர்ணயம் செய்யவும், விலை உயர்வுக்கு உரிய வழிவகைகளை மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் பி.செல்லதுரை கூறியது:
தமிழகத்தில் 10.5 லட்சம் ஏக்கரிலும், கர்நாடகத்தில் 14 லட்சம் ஏக்கரிலும் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக ஆண்டுக்கு ஒரு மரத்தில் 47 காய்கள் காய்த்து வந்தன. ஆனால், விளைச்சல் படிப்படியாக உயர்ந்து தற்போது ஆண்டுக்கு 147 காய்கள் வரை காய்க்கிறது.
வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யும்பாமாயில் லிட்டருக்கு ரூ.45 வீதம் மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. இதனால், தேங்காய் எண்ணெயின் பயன்பாடு குறைகிறது.
மேலும், விவசாயிகள் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப தேங்காய்களை எளிதாக விற்பனை செய்யமுடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால், தேங்காயின் விலை இரு மடங்காக சரிந்துள்ளது.இதனால், தோப்புகளிலேயே தேங்காய்களை உரிக்காமல் அப்படியே போட்டு வைத்திருப்பதால், ஒவ்வொரு தோப்பிலும் மலைபோல் தேங்காய்கள் குவிந்துள்ளன.
இதேபோல, ரூ.2-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தேங்காய் மட்டை, தற்போது 40 பைசாவாக குறைந்துள்ளது. மேலும், தேங்காய் மட்டையில் இருந்து தயாரிக்கப்படும் நார், பித் போன்ற பொருட்களின் வியாபாரமும் மந்தமாக உள்ளது. எனவே, தேங்காய் வியாபாரிகளைப் பாதுகாக்கும் வகையில், தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
செய்ய வேண்டியவை
தேங்காயில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை, அரசின் கூட்டுறவு உள்ளிட்ட துறைகள் மூலம் நேரடியாக விற்பனை செய்ய வேண்டும். குறிப்பாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் சத்துணவில் சேர்க்க வேண்டும்.
அரசால் அந்தந்த மாநிலங்களில் தென்னை விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில்கூட பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கும், பிற மாநிலங்களில் உள்ள விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் இடையே அரசு தொடர்பை ஏற்படுத்த வேண்டும்.
இதனால், வேளாண் விளைபொருட்களை, பிற மாநிலங்களில் விற்பனை செய்வதற்கு வசதியாகஇருக்கும். ஏனெனில், ரயில் மூலம் குறைந்த கட்டணத்தில் விளைபொருட்களை ஏற்றிச் செல்லகிசான் ரயில் இயக்கப்படுவதால் போக்குவரத்துக்கு சிரமம் இருக்காது.
தமிழகத்தில் கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ.105.90 வீதம் அரசே கொள்முதல் செய்கிறது. எனவே, மாவட்டத்துக்கு ஒன்று அல்லது 2 இடங்களில் மட்டுமே உள்ள அரசு கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், கொப்பரை தேங்காய் தயாரிப்பதற்கான உலர் களங்களையும் அதிக எண்ணிக்கையில் அரசே அமைத்துக் கொடுக்க வேண்டும்.
ஆண்டு முழுவதும் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்படுவதை மாநில அரசு உறுதிசெய்ய வேண்டும். மேலும், மத்திய அரசு அளிக்கும் நிதியை, மாநில அரசு செலவழிக்க வேண்டும். நிதி செலவிடப்படாமல் இருப்பதால், அடுத்தடுத்த முறை நிதி ஒதுக்கீடு குறைப்படுகிறது. பாமாயிலுக்கான மானியத்தைக் குறைப்பதுடன், குருடாயில் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் சரி செய்தால்தான் தென்னை விவசாயிகளும், தென்னை சாகுபடியும் காப்பாற்றப்படும் என்றார்.