ராமநாதபுரம், சென்னை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ’தொண்டர்கள் விரும்பும் ஒற்றைத் தலைமையே’ என்று ஓபிஎஸ்-க்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் மற்றும் மாவட்டச் செயலர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நடைபெற்ற கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில்” வரும் 23-ம் தேதி அமைதியான முறையில் பொதுக்குழுக் கூட்டம் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஒற்றைத் தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பெரும்பான்மை தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் ஆகியோர், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என்று வலியுறுத்தியுள்ளனர். எனினும், யார் என்பது குறித்து விவாதிக்கப்படவில்லை. இது தொடர்பாக கட்சி நிர்வாகக் குழு முடிவெடுத்து அறிவிக்கும். அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கட்சிக்கு ஒற்றைத்தலைமை தேவை என்று கருதுகின்றனர். காலத்தின் தேவை கருதி, இதுகுறித்து விவாதிக்கப்பட்டது” என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ராமநாதபுரம், சென்னை, தேனி உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசே, தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமையே என்ற வாசகங்களுடன் ஓபிஎஸ்தான் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. திடீரென்று முளைத்த இந்த போஸ்டர்களால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.