திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு புதுசேரி அருகே அம்பலப்பறம்பு பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான். சிபிஎம் பகுதி செயலாளர். இவரது பக்கத்து வீட்டில் சிபிஎம்.ன் தீவிர உறுப்பினரான ஒரு இளம்பெண் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டினருடன் ஷாஜகானுக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வருவார். இளம்பெண்ணின் வீட்டினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஷாஜகான்தான் செய்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண், வீட்டில் குளித்து கொண்டிருந்தார். அப்போது குளியலறைக்கு அருகே யாரோ நிற்பது போல தெரிந்தது. மேலும் ஜன்னல் வழியாக அந்த நபர் கையை நுழைத்துள்ளார். அதை பார்த்த இளம்பெண் பயந்து கூச்சலிட்டார். அந்த நபர் ஓடிவிட்டார். அதிர்ச்சியடைந்த இளம்பெண், ஷாஜகானிடம் விவரத்தை கூறுவதற்காக அவரை செல்போனில் அழைத்துள்ளார். அப்போது ஷாஜகானின் செல்போனில் கேட்கும் அதே ரிங்டோன் சத்தம் குளியலறைக்கு அருகே இருந்து கேட்டது. இது இளம்பெண்ணுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த செல்போனை எடுத்து பார்த்தபோது அது ஷாஜகானுடையதுதான் என தெரியவந்தது.இதுகுறித்து இளம்பெண், பாலக்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். ஷாஜகானின் செல்போனையும் அவர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதையறிந்ததும் ஷாஜகான் தலைமறைவானார். பல இடங்களில் தேடினர். கோவையில் இருப்பது தெரியவந்தது. உடனே நேற்று கோவைக்கு விரைந்து சென்று, ஒரு லாட்ஜில் இருந்த ஷாஜகானை கைது செய்து பாலக்காட்டுக்கு கொண்டு சென்றனர்.