சென்னை: ‘ஆபரேஷன் கந்துவட்டி’ சிறப்பு ஆய்வின் மூலம் ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
கடலூர், புவனகிரி அருகே கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படைக் காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க ‘ஆபரேஷன் கந்துவட்டி’ என்ற பெயரில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
‘கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள கந்துவட்டி வழக்குகளை உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கையெழுத்து வாங்கப்பட்ட வெற்றுக் காகிதங்கள் உள்ளிட்ட சட்ட விரோத ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும்’ என்பன உள்ளிட்ட உத்தரவுகள் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், “கடந்த ஒரு வாரத்தில், தமிழகம் முழுவதும் கந்துவட்டி மற்றும் மீட்டர் வட்டி தொடர்பாக 124 புகார் மனுக்கள் காவல் நிலையங்களில் பெறப்பட்டுள்ளன. இதில் 89 புகார் மனுக்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டடு, 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள புகார்களின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
கந்துவட்டி குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 பேரின் வீடுகளிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஆவணங்களான பூர்த்தி செய்யப்படாத காசோலைகள், புரோ நோட்டுக்கள், கையெழுத்திடப்படாத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 7 வழக்குகள், நாமக்கல் மாவட்டத்தில் 6 வழக்குகள் மற்றும் சேலம் மாநகரில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.