எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதம் எழுந்துள்ள நிலையில், ஒற்றைத் தலைமை குறித்து பாஜகவின் கருத்து என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் அளித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சிகள் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும், பொதுவேட்பாளரை நிறுத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது. பாஜகவின் வாக்குகளை வைத்தே சிங்கிளாக ஜனாதிபதி தேர்தலில் ஜெயித்து விடுவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ரஜினி கணேசன் உள்பட ஐநூறுக்கு மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜனாதிபதி யார் என்று மக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள். பாஜகவில் 49 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் உள்ளன என்றார். எதிர்க்கட்சிகள் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும், பொது வேட்பாளரை நிறுத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது. பாஜக வாக்குகளை வைத்தே சிங்கிளாகவே ஜெயித்து விடுவோம் என்று கூறினார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கோரிக்கை வலுப்பெற்று வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அண்ணாமலை கருத்து கூற மறுத்துவிட்டார்.
மேலும், அதிமுகவை பொறுத்தவரை அவர்களுடைய கட்சியை எப்படி நடத்த வேண்டும், எப்படிப்பட்ட தலைவர்கள் இருக்க வேண்டும் என முழுமையாக தீர்மானிக்கக்கூடிய சக்தி அதிமுக மட்டுமே. அதுகுறித்து வேறு எந்த கட்சிகள் கருத்து கூறினாலும் அது சரியாக இருக்காது. அதிமுக ஒற்றை தலைமை குறித்து பாஜக எந்த கருத்தும் கூறாது என்று அண்ணாமலை கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“