வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மஹாராஷ்டிராவில் மனைவிகள் எல்லாம், 7 ஜென்மத்திற்கும் தற்போது உள்ள வாழ்க்கை துணையே கணவராக வர வேண்டுமென ஆல மரத்தைச் சுற்றி வந்து வழிபட்ட நிலையில், கணவர்கள் சிலர், இனி எந்த ஜென்மத்திற்கும் இதே வாழ்க்கை துணை வரக்கூடாது என பிரார்த்தனை செய்து அரச மரத்தை 108 முறை எதிர்திசையில் சுற்றி வழிபட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். கணவனின் வெற்றிக்கு தூண்டுதலாகவும், தோல்வியடையும்போது தோள்கொடுத்து அரவணைத்து தட்டிக்கொடுக்கும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமாக கருதலாம். ஆனால், சில கணவன்மார்கள் மனைவி வரமாக அமையாமல், பாரமாக இருப்பதாக நினைக்கின்றனர். கணவனின் அதிகாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் சில மனைவிகள் வைத்திருப்பதால் தாங்கள் குடும்பத்திற்காக உழைத்தும் வீட்டிற்கு வந்தால் சுதந்திரம் இல்லாமல் கொடுமையையே அனுபவிப்பதாக பலரும் புலம்புவதும் நடக்கதான் செய்கிறது.
இதன் வெளிப்பாடே சில இடங்களில் மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம் உருவானதாக சில செய்திகளையும் பார்த்திருக்கிறோம். இது ஒருபுறம் இருக்க மனைவிகளோ ‛கணவனே கண்கண்ட தெய்வம்’ என போற்றிப்பாடிவதும் இருக்கிறது. என்னதான் குடும்பத்தில் கணவன் – மனைவி பிரச்னைகள் இருந்தாலும், கணவனே சிறந்தவன் என பல மனைவிமார்களும் சொல்வதும் உண்டு. இந்த நிகழ்வுகளின் வெளிப்பாடாக மஹாராஷ்டிராவில் வினோதமான நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது.
மஹா.,வில் உள்ள அவுரங்காபாத்தில் ‘வட் பூர்ணிமா’ தினம் நேற்று (ஜூன் 14) கொண்டாடப்பட்டது. இந்த நாளில் மனைவிகள் எல்லாம், 7 ஜென்மத்திற்கும் தற்போது உள்ள வாழ்க்கை துணையே கணவராக வர வேண்டுமென ஆலமரத்தைச் சுற்றி வந்து வழிபட்டனர். ஆனால், அதற்கு முந்தைய நாளில் கணவர்கள் சிலர், இனி எந்த ஜென்மத்திற்கும் இதே வாழ்க்கை துணை வரக்கூடாது என பிரார்த்தனை செய்து அரச மரத்தை 108 முறை எதிர்திசையில் சுற்றி வழிபட்டுள்ளனர். மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்களின் சங்கம் சார்பில் இந்த வினோத வழிபாடை நடத்தியுள்ளனர்.
இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் பாரத் புலாரே கூறுகையில், ‛வட் பூர்ணிமா விழாவில் பெண்கள் ஆலமரத்தை வணங்கி, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்காகவும், ஏழு ஜென்மங்களுக்கும் ஒரே கணவனை பெறவும் பிரார்த்தனை செய்கிறார்கள். எனவே அதற்கு முந்தைய நாளில், நாங்கள் இதே வாழ்க்கை துணையை எந்த ஜென்மத்திலும் பெறக்கூடாது என அரச மரத்தை வணங்கினோம். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் அவை தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது, ஆண்கள் எதிர்கொள்ளும் அநீதிக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பும் வகையில் சட்டங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனால், இந்த போராட்டத்தை நடத்தினோம்’ என்றார்.
Advertisement