அதிமுக-வில் நடந்து முடிந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வெடித்த ஒற்றைத் தலைமை விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், `கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை… அது காலத்தின் கட்டாயம், அது குறித்துதான் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது!’ என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.

ஜெயக்குமாரின் ஒற்றைத் தலைமை பேட்டியைத் தொடர்ந்து அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தேனி, ராமநாதபுரம் என பல்வேறு இடங்களில் அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். எடப்பாடி ஆதரவாளர்களும் அவருக்கு ஆதரவாக கட்சியில் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று மாலை சென்னையில் உள்ள ஓ.பி.எஸ் வீட்டின் முன்பு அ.தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிக அளவில் குவிந்தனர். அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார்கள்.

அதையடுத்து, ஓ.பி.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ், “அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜெயக்குமாரின் கருத்து கட்சியின் கருத்து அல்ல… அவர் கூட்டத்தில் நடந்ததை பற்றி ஊடகங்களிடம் பேசியதே தவறு. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் சீராக செயல்பட்டு வருகிறது. கட்சியை அழிக்க யார் நினைத்தாலும் ஓ.பி.எஸ் விடமாட்டார்” என்றார்.
கோவை செல்வராஜின் முழு பேட்டியை மேலே இணைக்கப்பட்டிருக்கும் வீடியோவில் பார்க்கலாம்!