சோபியான்: ஸ்ரீநகர் அடுத்த சோபியானில் லஷ்கர் – இ – தொய்பா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து நேற்று மாலை முதல் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். சோபியான் அடுத்த கஞ்சியுலரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த சம்பவத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவன் ஷோபியான் பகுதியைச் சேர்ந்த ஜான் முகமது லோன் என்பது தெரியவந்துள்ளது. இவன் குல்காம் மாவட்டத்தில் கடந்த ஜூன் 2ம் தேதி வங்கி மேலாளர் விஜய் குமாரைக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடையன். மற்றொரு தீவிரவாதியின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம். இந்த சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவரும் காயமடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்றன.
