சென்னை: அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், வட பெரும்பாக்கம் பகுதியில் நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு சாயிரா பேகம் என்பவர் அளித்த விண்ணப்பத்தில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. அந்த மின் இணைப்பை துண்டிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அந்த நிலத்தை அண்ணாமலை என்பவர் வாங்கியுள்ளார். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து அண்ணாமலை மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, தமிழகத்தில் இயற்கை கொடையாக அளித்த பல நீர்நிலைகள் உள்ளன. இருப்பினும் வேலூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் ஆறு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக தகவல் கிடைத்ததாக கூறிய தலைமை நீதிபதி, ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உள்ள அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இதற்கு காரணம் என குற்றம்சாட்டினார்.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்க அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்படுவதாக சாடிய தலைமை நீதிபதி, அவர்கள் எதற்காக ஊதியம் பெறுகின்றனர்? எனவும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதேபோல மற்றொரு வழக்கில் அதிகாரிகள் தங்கள் பணியை செய்வதில் குறைபாடு இருந்தால் அதற்கு காரணம் அரசு தான் என்றும், பொதுமக்களுக்காக எந்த அதிகாரிகளும் தங்கள் பணியை செய்வதில்லை எனவும் குற்றம்சாட்டினர்.
ஊழலில் சிக்காமலும் சில அதிகாரிகள் பணியாற்றுவதாகவும், பெரும்பாலான அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் எந்த பணியையும் செய்வதில்லை என்றும் சுட்டிக்காட்டினர். இதுபோன்ற நிலை தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இந்த நிலை நிலவுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.