சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் அறிவுறுத்தினார். யாருடைய தலைமையில் கட்சி இயங்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததில் இருந்து கட்சியில் அவ்வப்போது பெரிய குழப்பங்கள் நிலவி வருவது வழக்கமாகி விட்டது. ஜெயலலிதா இறந்தபோது யார் அடுத்த முதல்வர், ஒபிஎஸ் தர்மபுத்தம் என பரபரப்பாக சென்றுகொண்டிருந்த அதிமுகவில் ஒரு கட்டத்தில் ஒபிஎஸ் இபிஎஸ் இருவரும் இணைந்து கட்சியை வழிநடத்தினர்.
ஆனாலும் கட்சியில் ஒபிஎஸ் இபிஎஸ் இருவருக்குள்ளும் பனிப்போர் நிலவி வருகிறது என்று தகவல்கள் வெளியானது. அதற்கு ஏற்றார்போல் சில சமயங்களில் இருவரும் தங்களது லெட்டர் பேடில் தனி அறிக்கைகயை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அதேபோல் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்பதிலும் ஒபிஎஸ் இபிஎஸ் இருவரிடையே போட்டி இருந்ததாக கூறப்பட்டது.
இந்த மாதிரியான சர்சசைகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என பலரும் கேட்க தொடங்கிவிட்டனர். ஜெயலலிதா இறந்த உடன் அவர் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என இரண்டு புதிய பதவிகள் கொண்டுவரப்பட்டது.
இதில் ஒருங்கிணைப்பாளராக ஒபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் செயல்பட்டு வரும் நிலையில், ஒற்றை தலைமை என்று வந்தால் இவர்கள் இருவரில் யார் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமக தோல்வியை சந்தித்து ஒற்றை தலைமை இல்லாததே காரணம் என்று கட்சி நிர்வாகிகள் பலரும் கூறியிருந்தனர்.
இரட்டை தலைமை என்று இருப்பதால் கட்சியின் பொறுப்புகள் மூலம் தேர்தலில் போட்டியிடுவது வரை இரு தரப்பினரும் மாறி மாறி தங்களுக்குள்ளேயே பதவிகளை பெற்று வருகின்றனர். இதனால் கட்சியில் இருந்து சிலர் மூத்த நிர்வாகிகள் வெளியேறிவிட்ட நிலையில், சிலர் கட்சியில் இருந்து விலகி திமுக மற்றும் அமமுகவில் தஞ்சமடைந்துவிட்டனர்.
இந்நிலையில், சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வந்தவுடன் அவரை சந்தித்த பல அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் அதிமுகவிற்கு தலைமையேற்ற வாருங்கள் சின்னம்மா என்று தமிழகத்தின் பல இடங்களில் சசிகால அதிமுகவிற்கு வர வேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. ஆனாலும் இபிஎஸ் ஒபிஎஸ் தலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை.
இந்நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷம் தொண்டர்கள் மத்தியில் அதிகமாக ஒலிக்க தொடங்கிய நிலையில், தற்போது மாவட்ட செயலாளர்களே கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறி வருகினறனர். தற்போது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ள அதிமுக தலைமை கட்சி யாருடைய தலைமையில் இயங்கும் என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே கட்சியின் ஒற்றை தலைமை என்ற பேச்சு விகாரமாக ஒலிக்க தொடங்கியுள்ள நிலையில், வரும் 23-ந் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்பட்டு அதற்கான தேர்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது. தற்போது அதிமுக ஒற்றை தலைமை தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் இருவரையும் அவர்களது ஆதரவாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் இபிஎஸ்-ஐ சந்தித்துவிட்டு வந்த அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக தளவாய் சுந்தரம் கூறுகையில். அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது அதிமுக மாவட்ட செயலாளர்கள் நேற்றைய கூட்டத்தில் எடுத்த ஒரு நிலைபாடு. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்த நடைபெற்று வருகிறது. இதில் யாருமைய தலைமை நியமிக்கப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சுமூக சூழ்நிலைக்காக அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், அதிமுகவில் தற்போது எதிர்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியே ஒற்றை தலைமையாக வரவேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஒ.பன்னீர்செல்வமே ஒற்றை தலைமையாக வரவேண்டும் என்றும் இருவரின் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகம் முன்பு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே எடப்பாடி பழச்சாமியே ஒற்றை தலைமையாக இருக்க வேண்டும் என்று கூறி முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் உள்ளிட்ட பலரும் ஒ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil