புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
தற்போது குடியரசுத் தலைவராக பதவி வகித்து வரும் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. எனவே, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக பல்வேறு எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நாளில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 29-ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30-ம் தேதி நடக்கும். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு ஜூலை 2-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரை நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் வாக்களித்து தேர்வு செய் கின்றனர்.
சில மாநிலங்களில் சட்ட மேலவை உள்ளது. மேலவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. இதேபோல மக்களவை மற்றும் மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்களுக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குரிமை இல்லை.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை டெல்லியில் ஜூலை 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 25-ல் பதவியேற்பு
தேர்வு செய்யப்படும் புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25-ம் தேதி பதவியேற்றுக் கொள்வார். குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆக உள்ளது. 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டப்பேரவைகளில் உள்ள 4,033 எம்எல்ஏக்கள் என ஒட்டுமொத்தமாக 4,809 பேர் வாக்களிக்க உள்ளனர்.
1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் வாக்குகள் மதிப்பு கணக்கிடப்படுகிறது. மாநிலங்களவை எம்.பி., மக்களவை எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு மாறாது. ஆனால், மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப எம்எல்ஏக்களின் வாக்குகளின் மதிப்பு மாறுபடும்.
இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது. உறுப்பினர்கள் வாக்குச்சீட்டு முறையில் ரகசியமாக தங்களுடைய வாக்குரிமையை செலுத்த வேண்டும். இந்த வாக்குச்சீட்டில் குறிப்பிட்ட வேட்பாளரை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் வழங்கும் பிரத்யேக பேனாவை மட்டுமே வாக்காளர் பயன்படுத்த வேண்டும்.
குடியரசு தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இன்னாருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கட்சி கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது. மேலும், குறிப்பிட்ட வேட்பாளருக்கு சாதகமாக வாக்களிக்க பணம் கொடுப்பதும், செல்வாக்கை செலுத்தி வாக்குரிமை செலுத்த நிர்பந்திப்பதும் சட்டவிரோத செயலாக கருதப்படும்.